நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாக 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: இந்திய பார் கவுன்சில் உத்தரவு

நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாக 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்:  இந்திய பார் கவுன்சில் உத்தரவு
Updated on
1 min read

நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை கண்டித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஜூலை 22-ம் தேதிக்குள் விலக்கிக்கொள்ளவில்லை என்றால் தொடர்புடைய வழக்கறிஞர்கள சங்க நிர்வாகிகள் மற்றும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 25) திட்டமிட்டபடி உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்திருந்தது. முன்னதாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் முழு அமர்வு கூட்டத்தில் புதிய விதிகளின் படி எந்த வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்க குழு நிர்வாகிகள் திருமலைராஜன், சிவசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலர் அறிவழகன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நளினி உள்ளிட்ட 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சில் நேற்று இரவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர் அதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன் சில் நேரடியாக இடைநீக்கம் செய்திருப்பது வழக்கறிஞர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in