Published : 03 Mar 2017 02:31 PM
Last Updated : 03 Mar 2017 02:31 PM

அரசியல் கலப்பின்றி, சுய லாபமின்றி நெடுவாசல் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும்: ஸ்டாலின் உறுதி

ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் நலன் கருதி அரசியல் கலப்பின்றி, சுய லாபமின்றி, எதைப்பற்றியும் கவலையின்றி நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக என்றைக்கும் துணை நிற்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெடுவாசல் பகுதிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பேசிய அவர்,

"தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால் கருணாநிதியின் பிரதிநிதியாக இந்தப் போராட்டத்திற்கு நான் ஆதரவு தர வந்திருக்கின்றேன். இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கின்றேன்.

விவசாயப் பெருங்குடி மக்களைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் சிறப்பான முறையில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருந்த கடன் தொகை, ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்ல, ஐந்து கோடியோ பத்து கோடியோ அல்ல, மொத்தம் 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ஒரே கையெழுத்தில், கருணாநிதி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தபோது தள்ளுபடி செய்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அந்த உரிமையோடும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருக்கின்ற உங்களைச் சந்தித்து வாழ்த்து சொல்வதற்கு வந்திருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவரை சந்திக்க நான் சென்றிருந்தேன். அந்தநேரத்தில் இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து, புரிந்து உடனடியாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க வேண்டுமென அவரின் அலுவலகத்தில் தொடர்புகொண்டு நேரம் கேட்டேன். ஆனால், அவரை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நான் எழுதிய கடிதத்தை அவருடைய அலுவலகத்தில் சேர்த்துவிட்டு, அதற்குப் பிறகுதான் நான் திரும்பி வந்தேன்.

நேற்றைய முன்தினம் அவரைப் பார்ப்பதற்காக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சகோதரி கனிமொழிக்கும் நேரம் வழங்கப்பட்டது.

அதை பயன்படுத்தி, உண்மையை வெளிப்படையாக சொல்கிறேன், நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்களே இந்தப் போராட்டத்தைப் பற்றியும், உங்கள் கோரிக்கைகளை, நோக்கத்தை டெல்லியில் இருக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரிடத்தில் எடுத்து சொல்வதற்காக அவர்களை நான் அனுப்பி வைத்தேன்.

அவர்களும் நேரிடையாக சென்று அமைச்சரை சந்தித்து பேசி, எல்லா விவரங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, நேற்றைக்கு இந்தப் போராட்டக்குழுவினர் தமிழகத்தின் முதலமைச்சரையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை பத்திரிக்கைகளில் நானும் பார்த்தேன்.

ஆனால் இப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்லும் கோரிக்கை என்னவென்று கேட்டால், மாநில அரசு சொல்வதை நாங்கள் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே, மத்தியில் இருப்பவர்கள் சொன்னால்தான் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும், என்ற உணர்வோடு நீங்கள் இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமல்ல கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து இருக்கிறார்.

பிரதமரிடம் 23 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்துவிட்டு வந்திருக்கிறார். நான் வேதனையோடு சொல்கிறேன், அந்த 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் இந்த நெடுவாசலில் நீங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற, உங்களுடைய பிரச்சினை பற்றி சுட்டிக் காட்டப்பட்டதா என்று கேட்டால் சுட்டிக்காட்டப்படவில்லை என்பதுதான் உண்மை.

அது உள்ளபடியே நமக்கு வேதனையாக இருக்கின்றது. ஏன் சுட்டிக்காட்டப் படவில்லை என்பது புரியாத புதிராக, அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பது தெரியாமல் நாம் இருக்கிறோம்.

ஆனால் அதே முதலமைச்சர் பிரதமரை சந்தித்து விட்டு வெளியில் வந்து, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்று பேட்டி தருகிறார். மனுவாக அளித்த 23 பிரச்சினைகளில் ஒன்றாக அது சொல்லப்படவில்லை.

ஆனால், வெளியில் வந்து அப்படி சொன்னதாக தெரிவிக்கிறார். அவர் உண்மையாகவே சொல்லி இருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், அவர் சொன்னதாக தெரிவித்த பிறகும் மத்திய அரசு இதுவரை ஒரு நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏறக்குறைய இன்றைக்கு 16 வது நாளாக, எதையும் எதிர்பார்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்தவித அரசியல் கலப்புமின்றி, தங்கள் சுய லாபத்துக்காக இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சினையாக உள்ள இந்தப் பிரச்சினையை முன்வைத்து, தொடர்ந்து நடைபெறக்கூடிய இந்தப் போராட்டத்தின் தன்மையை புரிந்து கொண்டு, இந்த திட்டம் நிச்சயம் வராது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

இந்த திட்டம் அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் சொல்லி இருந்தாலும், மத்திய அரசிடம் வலியுறுத்தி, இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் பணியில் மாநில அரசு ஈடுபட வேண்டுமென்று நான் மாநில அரசையும் இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள உங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை, வணக்கத்தை, வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவிக்கும் அதே நேரத்தில், தொடர்ந்து இதே நிலை நீடிக்குமென்று சொன்னால், போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவதற்கு நீங்களும் நிச்சயமாக தயாராக இருக்கின்றீர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிக்குமென நான் உள்ளபடியே எதிர்பார்க்கின்றேன், நம்புகிறேன். ஒருவேளை அந்த நிலை ஏற்படாமல் போகும் சூழ்நிலையில் நீங்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்"

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x