

பயிர் காப்பீடு திட்டத்துக்காக மேலும் ரூ.888 கோடியை வழங்க இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை விவசாயிகளுக்கு 10 நாட்களில் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைந்ததால் ஏற்பட்ட வறட்சி காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தன. காப்பீடு செய்து பயிர் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மகசூல் விவரங்களை விரைவாக வழங்க அரசு அறிவுறுத்தியிருந்தது. அதனால் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டு, ஜூன் 20-ம் தேதி வரை ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஐசிஐசிஐ லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் சார்பில் சேலம், திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 40 லட்சமும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டுக் கழகம் மூலமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.18 கோடியே 60 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.15 கோடி, இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தால் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட் டுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளால், சம்பா நெல் சாகுபடி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 2-ம் கட்டமாக ரூ.888 கோடியை வழங்க இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.489 கோடி
அதில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.489 கோடி வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.355 கோடியும், திருச்சி மாவட்டத்துக்கு ரூ.20 கோடியும், அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.24 கோடியும் வழங்கப்பட உள்ளது. இந்த தொகை, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக, அடுத்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும் என இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.