

கோவை வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்யும் கலை பாடப்பிரிவு நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை வாகராயம் பாளையத்தில் 1962-ம் ஆண்டு அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் உயர்நிலைப் பள்ளியாகவும், கடந்த 2002-ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. வாகராயம் பாளையம், பச்சாபாளையம், கணபதிபாளையம், சோளக்காட்டு பாளையம் என சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். மதிப்பெண், தொழில்வாய்ப்புகள் அடிப்படையில் கலை பாடப்பிரிவில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த பிரிவில் தான் அதிக சேர்க்கையும் நடக்கிறது. ஆனால், மாணவர்கள் அதிகம் விரும்பும் அந்த பாடப்பிரிவின் மீது கல்வித்துறை கவனம் செலுத்த மறுக்கிறது.
இந்த நிலை இன்று, நேற்றல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே கலைப்பிரிவு வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனமோ, இதர வசதிகளோ கல்வித்துறையால் செய்து கொடுக்கப்படவில்லை என்பது இங்குள்ள மக்களின் குற்றச்சாட்டு. இருந்தாலும், மாணவர்களின் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நிதி திரட்டி 10 வருடங்களாக இந்த பாடப் பிரிவை நடத்தி வருகின்றனர். இப்போது நிலைமை மோசமாகி, தன்னார்வலர்களாலும் அந்த பாடப்பிரிவை தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேறு வழியின்றி மாணவர்கள் விரும்பும் கலைப்பிரிவு பாடத்தை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்த முடிவு செய்துள்ளனர். இனி கல்வித்துறையினர் முயற்சித்தால் மட்டுமே அந்த பாடப்பிரிவு தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தீர்வு கிடைக்கவில்லை
முன்னாள் மாணவர் செல்வராஜ் கூறும்போது, ‘மேல்நிலை வகுப்பில் 2 அறிவியல் பிரிவுகளும், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் பாடங்களைக் கொண்ட கலைப்பிரிவும் (3-வது குரூப்) உள்ளது. இதில் முதல் இரு பிரிவு களுக்கு மட்டுமே அரசு நிதி ஆதாரம் வழங்குகிறது. ஆனால் அவற்றை விட, தொழில்வாய்ப்புகள் அதிகமுள்ள 3-வது பிரிவையே இங்குள்ள மாணவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதனால் இருமடங்கு மாணவர்கள் கலைப்பிரிவில் படிக்கிறார்கள். அதற்காகவே அந்த பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. ஆனால் அதை நடத்த போதிய நிதி இல்லை. ரூ.1.63 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. வேறு வழியின்றி முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கலைப்பாடப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கல்வித்துறையிடம் பல முறை வலியுறுத்தியும் தீர்வு இல்லை. வேறு வழியின்றி மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.
‘இங்கு மட்டுமல்ல, 2002 கால கட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பல பழமையான அரசுப் பள்ளிகளிலும் இந்த நிலைதான் உள்ளது. மாணவர்களுக்குத் தேவையான பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். தேவைப்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழகமே ஆசிரியர்களை நியமித்து நிதி திரட்டி ஊதியம் வழங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், பாடப்பிரிவை நீக்கும் சூழல் தான் உள்ளது. கல்வித்துறையில் மாற்றங்களை செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு, மாணவர்கள் நலனுக்காக இப்பிரச்சினையிலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்கின்றனர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்.
சுட்டிக்காட்டியது ‘தி இந்து’
கடந்த ஆண்டும் இதேபோல நிதிச் சிக்கல் நிலவியபோது, முன்னாள் மாணவர்கள், வாட்ஸ் அப் மூலமாக தகவலைப் பரப்பி நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அது குறித்து கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. அதில் முன்னாள் மாணவர்கள் எடுத்துள்ள முயற்சியும், கல்வித்துறைக்கு அவர்கள் வைக்கும் கோரிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டது. அதைப் பார்த்த வரதராஜன் என்ற வாசகர் வாகராயம்பாளையம் அரசுப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை அளித்தார் என்பதையும், கடந்த கல்வியாண்டில் அந்த நிதி பெரும் உதவியாக இருந்ததாகவும் முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர்.
படிப்பை கைவிடும் சூழல்
முன்னாள் மாணவர்கள் கூறும்போது, ‘5.7 ஏக்கர் பரப்பிலான இடம், போதுமான கட்டிடம் உள்ளிட்டவை உள்ளன. ஆனால் இரவுக்காவலர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதையும் தன்னார்வலர்களே செய்து கொடுத்தனர். பள்ளியை தரம் உயர்த்திய கல்வித்துறை அதற்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. கலைப் பாடப்பிரிவு நிறுத்தப்பட்டால், சுமார் 10 கி.மீட்டர் கடந்து சென்று மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும். அதனால் பலரும் படிப்பையே கைவிடும் நிலையும் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறையினரிடமே உள்ளது’ என்றனர்.