

ஆளுநர் உரையை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று உரை யாற்றினார். அவர் பேசத் தொடங் கியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச அனுமதி கேட்டார். அனுமதி மறுக் கப்படவே, ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப் பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பேரவை வளாகத்துக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகமே இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி சாகுபடிக்கான நீரை முறையாக பெற்றுத் தராததால் 244 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர். அது தொடர்பாக விவாதிக்க பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற போதும் அரசு பதிலளிக்கவில்லை.
தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்களும் குடும்பம், குடும்ப மாக சென்னை கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அறவழியில் போராடிய மாண வர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். தேச விரோத சக்தியாக செயல்படும் ‘பீட்டா’வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எல்லா மாவட்டங்களிலும் நிலத் தடி நீர் மட்டம் இறங்கு முகத்தில் இருந்து வருவதால் தமிழகம் முழு வதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இடைவிடாத கோரிக்கைகளால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்த மாநில அரசு, அதற்காக எந்த சலுகைகளையும் விவசாயி களுக்கோ மற்ற பிரிவினருக்கோ செய்ய முன்வரவில்லை. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட் டும் தடுப்பணையை தடுக்க தமிழக முதல்வர் முயற்சிக்கவில்லை.
மத்திய அரசின் ‘நீட்’ மற்றும் புதிய கல்விக்கொள்கையை கண் டித்து திமுகவும், மற்ற எதிர்க் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்கவில்லை. ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் முறையாக சென்று சேரவில்லை. எனவே, சம்பிரதாயத்துக்காக வைக்கப்படும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு ஸ்டாலின் தெரி வித்தார்.