Published : 14 Oct 2014 10:08 am

Updated : 14 Oct 2014 11:11 am

 

Published : 14 Oct 2014 10:08 AM
Last Updated : 14 Oct 2014 11:11 AM

ஆயிரக்கணக்கில் உயிர் பறித்த செயற்கை ஆறு!- சலனமின்றி செல்லும் நீரோட்டத்தில் மக்கள் பலியாவது ஏன்?

பயிர்கள் செழித்து உயிர்கள் வாழ்வதற்காக அமைக்கப்பட்ட செயற்கை ஆறு, தொடர்ந்து உயிர்கள் பறிபோகவும் காரணமாக அமைந்துவிட்டால் என்ன ஆவது? தொடர்ந்து பல ஆண்டுகளாக அரங்கேறி வரும் இந்த சோகம் பற்றி முழுமையான தகவல்களைத் திரட்டி முடித்தபோது பேரதிர்ச்சியாக இருந்தது.

தஞ்சை நகரின் வழியே ஓடும் ‘புது ஆறு’ எனப்படும் கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து கடந்த 80 ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று ஒரு கணக்கு சொல்லி, கலங்க வைக்கிறார்கள் இந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள்.

மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கல்லணைக் கால்வாயை வந்தடைந்தது. பின்னர் அங்கு திறக்கப்பட்ட நீர் கடந்த 16-ம் தேதி தஞ்சாவூர் வந்தடைந்தது. புது ஆற்றில் தண்ணீர் வந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கடலூரைச் சேர்ந்த தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அதற்கு முதல் நாள் மதுக்கூரில் இதே ஆற்றின் கிளை வாய்க்காலில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று கடந்த சில நாட்களில் சுமார் 15 பேர் வரை இந்த ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆத்துக்கு வித்தியாசம் தெரியாது..

“இந்தப் படித்துறையில இப்ப தண்ணி வந்த 2 மாசத்துல மட்டுமே இதுவரை 23 பேர் போயிட்டாங்க. சிலபேர மட்டும் காப்பாத்தினாங்க. நீச்சல் தெரிஞ்சவங்ககூட இந்த ஆத்துல அடிச்சுட்டு போயிருக்காங்க. முன்னவிட இப்ப பயங்கர இழுப்பா இருக்கு. கரையெல்லாம் புதுப்பிச்சு, தளம் போட்டதால இழுப்பு ஜாஸ்தியாயிருச்சி. எனக்கு நீச்சல் தெரிஞ்சாலும் இப்ப ஆத்துக்குள்ள எறங்குறதில்ல. முன்ன இந்தப் படித்துறையில வருஷத்துக்கு 10 பேராவது போயிடுவாங்க. இது, வருஷா வருஷம் அதிகமாயிட்டே வருது.

சின்னவன், பெரியவன், நீச்சல் தெரிஞ்சவன், தெரியாதவன்னுல்லாம் இந்த ஆத்துக்கு வித்தியாசம் தெரியாது. வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் 3 பேருகூட போயிட்டாங்க” என்கிறார் தஞ்சை பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகை எதிரில் உள்ள படித்துறையில் தினமும் குளிக்கும் மிஷன் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் (53).

தஞ்சை நகரின் மிக அழகானதும், மிகவும் ஆபத்தானதுமான படித்துறை இதுதான். இந்தப் பகுதியில் ஆறு வளைந்து செல்வதால், இயல்பாகவே இங்கு நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.

நானும் தப்பி பிழைச்சேன்

“சைடு, தரை எல்லாம் சிமென்ட் சிலாப் போட்டதால இழுவை அதிகமாருக்கு. ஆனா, மேல தெரியாது. நீச்சல் தெரியாம ஆத்துல எறங்குறவங்களோட கால எடறி தரையோட உருட்டிகிட்டு போயிடும். அசந்தா, படித்துறையில துணி தொவைக்கிறவங்களகூட இழுத்துட்டு போயிடும். எப்படிப்பட்ட நீச்சல் தெரிஞ்ச ஆளையும் இழுத்துடும். நானே ஒரு முறை போகவேண்டியிருந்தேன்! தப்பி பொழைச்சிட்டேன்” என்கிறார் மானம்புச்சாவடியை சேர்ந்த குமார் (52).

கடந்த ஆண்டில்...

கடந்த ஆண்டில்கூட தண்ணீர் வந்த சமயத்தில் இந்த ஆற்றில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் (மானோஜிபட்டி) இதே ஆற்றில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரீகன் என்பவர் இழுத்துச் செல்லப்பட்டபோது, அவரை ரீகனின் தம்பியும் நண்பர் ராஜ்குமாரும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மொத்தத்தில் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ரீகனின் தம்பியை மட்டும் அப்பகுதி மக்கள் காப்பாற்றினர். எஞ்சிய இருவரின் சடலங்களைத்தான் மீட்க முடிந்தது.

வகுப்பிலும், போட்டிகளிலும் எப்போதும் முதல் மாணவனாக வந்த தனது மகனை மிகுந்த வறுமையிலும் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்து அழகு பார்த்த சலவைத் தொழிலாளியின் கனவும் இந்த ஆற்றிலேயே கரைந்துபோனது. விடுமுறை நாள் ஒன்றில், தனது நண்பனுடன் பெரிய கோயில் அருகில் உள்ள இந்த ஆற்றில் இறங்கி விளையாடியபோது தவறி விழுந்த பாலாமணி (10) உயிரிழந்தான்.

தஞ்சை ரயிலடி அருகில் உள்ள தைக்கால் பகுதியில் வசித்துக்கொண்டு, (குழாய்களில் தண்ணீர் பிடித்து) கடைகளுக்கு ஊற்றிப் பிழைத்து வரும் ஏழைத் தம்பதியின் இளம் வயது மகன் ஏழுமலை (10) விடுமுறை நாளில் காந்திஜி சாலை இர்வின் பாலம் அருகில் ஆற்றோரம் கால் கழுவ இறங்கியபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான்.

தம்பியைக் காப்பாற்ற அண்ணனும், மகனைக் காப்பாற்ற தந்தையும், நண்பனைக் காப்பாற்ற முயன்று மூழ்கிப் போன நூற்றுக்கணக்கானோரின் நினைவுகள் இந்த ஆற்றினுள்ளும், கரையோர மக்களிடமும் பொதிந்துள்ளன.

புது ஆறு - இயற்கை ஆறு: வித்தியாசம் என்ன?

புது ஆற்றுக்கும் மற்ற ஆறுகளுக்கும் சில அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. மற்ற ஆறுகள் இயற்கையாக அமைந்தவை. புது ஆறு மனிதனால் வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகளுக்குப் பெரும்பாலும் முறையான, உயர்ந்த கரைகள் இருக்காது. அதனால், ஆற்றின் ஓரங்களில் புதர்கள் மண்டியிருக்கும், ஆழமும் குறைவாக இருக்கும். தண்ணீரில் அடித்துச் செல்லப்படுபவர் புதர்ச் செடி, கொடிகளைப் பிடித்து உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆனாலும், இயற்கை ஆறுகளில் வரைமுறையில்லாமல் மணல் அள்ளப்பட்டு பள்ளமாகி, வாய்க்கால்களும், வயல்களும் மேடாகிப் போனதால் தண்ணீர் மேலேற வசதியாக முழுக் கொள்ளளவைத் தாண்டி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எப்போதும் ஆபத்தான ஆறு

“புது ஆறு அதிக ஆழமும், குறைவான அகலமும் கொண்டது என்பதால் மற்ற ஆறுகளைக் காட்டிலும் இதன் வேகம் அதிகம். இதன் கரைகள் சிமென்ட் சிலாபுகளையும், தரை சிமென்ட் தளம் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால் தண்ணீரின் வேகம் அதிகம். அதனால்தான் நன்றாக நீச்சல் தெரிந்தவர்களேகூட இறந்த சம்பவங்களும் நிறைய உள்ளன.

இந்த ‘கல்லணைக் கால்வாய்’ ஆறு பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட 1934-லிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15 பேர் என்ற அளவில் கடந்த 80 ஆண்டுகளில் 1,200 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கக்கூடும் எனக் கூறும் பெரிய வர்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக இப்பகுதியில் ஓடிவரும் காவிரி ஆற்றில்கூட குளிக்கச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு இருந்திருக்காது என்கின்றனர்.

அதனால், புது ஆற்றங்கரையோர மக்கள் இந்த ஆற்றை பிணந் திண்ணி ஆறு என்கின்றனர்.

இதுதான் ‘புது ஆறு’ வரலாறு

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் இந்த ஆறு வெட்டப்பட்டு, 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டோடு 80 வயதை நிறைவு செய்கிறது.

இந்த ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் தான் வடிவமைத்தார்.

கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திர இந்திய அரசால் வெட்டப்பட்டவை. இந்த ‘ஏ’ கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ.

இந்த ‘ஏ’ கால்வாயில் கல்லணை தலைப்பில் தொடங்கி ஒரத்தநாடு அருகில் உள்ள வெட்டிக்காடு வரையிலான சுமார் 70 கி.மீ. மிகவும் ஆபத்தானதாகக் குறிப்பிடப்படுகிறது. வெட்டிக்காடு வரையில் கரையோரம் உள்ள ஒவ்வொரு ஊரும், நகரமும் குறைந்தது தலா 10 முதல் 20 பேர் வரை இந்த ஆற்றுக்கு பலி கொடுத்துள்ளது என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள்.

பாசனப் பொறியியலின் உன்னதம்

தஞ்சை பெரிய கோயில் கட்டிடக் கலையின் உன்னதம் என்றால், புது ஆறு பாசனப் பொறியியலின் உன்னதம். இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது.

இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் (siphon) எனப்படும் சுரங்கங்களும், மேலே சூப்பர் பேஸேஜஸ் (super passages) எனப்படும் (மேல்நிலை கால்வாய்களும்). பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் (aqueduct) எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் (drop) எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருவெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி புதுமைகளைக் கொண்ட இந்த ஆறு, நாட்டி லேயே அதிகமானோரை பலிவாங்கிய ஆறுகளில் ஒன்றாக இருப்பதுதான் சோகத்திலும் சோகம்.

மேலே வேகம் தெரியாது!

இதுபற்றி பொறியாளர்களின் கருத்தை நாடினோம்:

“இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும்.

கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் (contour) கால்வாய் இது.

இதனால்தான், இந்த ஆறு தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும். பக்கவாட்டிலும், தரையிலும் சிமென்ட் சிலாபுகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் திசைவேகம் (velocity) அதிகமாக இருக்கும். மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே 2-3 மடங்கு அதிகமாக இருக்கும்.

பொதுவாக, எந்த உடலும் தண்ணீருக்குள் சென்றதும் எடை இழப்பு ஏற்படும். அதனால், கால்கள் தரையில் நிற்காது. மிதக்கும்.இந்த ஆற்றில் அடி நீரோட்டம் வேகமாக இருப்பதால், நீச்சல் தெரியாதவர்கள் இழுத்துச் செல்லப்படு வார்கள். நீச்சல் தெரிந்தவர் எதிர்நீச்சல் போட்டாலும் ஆபத்துதான். நீரோட்டத் தோடு சேர்ந்து மிதந்தே கரையேற வேண்டும்” என்கிறார் பொதுப் பணித்துறை உதவிப் செயற்பொறியாளர் எம்.சேகர்.

பலியானவர்களில் சிலர்

ரூ.2,000 கோடியில் திட்டம்

“கடந்த 1995-ல் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது வெளியூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்லும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கி தஞ்சை நகருக்குள் புதுஆற்றின் அனைத்துப் படித்துறைகளிலும் இரும்புக் கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கம்பிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்தாலும், ஓரளவு உயிரிழப்பு குறைந்தது. அந்தக் கம்பிகளை அமைத்து நீண்ட காலம் ஆகிவிட்டதாலும், பராமரிப்பு இல்லாமல் துருப்பிடித்துப் போனதாலும், தனிநபர்கள் இதனை உடைத்து எடுத்துச் சென்றுவிட்டனர். மீண்டும், அனைத்து படித்துறைகளிலும் குறுகிய இடைவெளியுடன் கூடிய பலமான இரும்புத் தடுப்புகளை அமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும். இதுதான் இதற்கான உடனடித் தீர்வு” என்கின்றனர் பொதுமக்கள்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையிடம் கேட்டபோது, “இது பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்ட கால்வாய். எங்களது முதன்மை பணி பாசன நிலங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்வதுதான்.

அதற்குதான் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள்தான் இப்பணிகளை மேற்கொள்ளவேண்டும். தஞ்சை மாநகராட்சியால் ஒருவேளை இயலவில்லை என்றால், அரசு எங்களுக்கு நிதி ஒதுக்கித்தரட்டும். அந்த தற்காப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம்.

முன்னர், கல்லணைக் கால்வாய் படித்துறைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு இரும்புக் குழாய்களை தண்ணீர் இல்லா காலங்களில் உடைத்து எடுத்துச் சென்றுவிட்டனர். பொதுமக்கள் இவற்றை பாதுகாக்க வேண்டும். புதிதாக 35 இடங்களில் படித்துறை, மாடு குளிப்பாட்டும் சாய்தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. ரூ.2,000 கோடியில் இந்தக் கால்வாய் மேம்படுத்தும் திட்டம் தயாராகி வருகிறது. அதை செயல்படுத்தினால்தான் தொடரும் அநியாய மரணங்களுக்கு முடிவு ஏற்படும்” என்றார் பொதுப்பணித் துறை கல்லணைக் கால்வாய் பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர்.

வேளாங்கண்ணி, மெரினாவில் வைக்கப்பட்டுள்ளது போல, ஆற்றின் ஆபத்தான பகுதிகளை அடையாளப்படுத்தி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும். மிகவும் ஆபத்தான பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். தீயணைப்பு மீட்புப் பணித்துறையினர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று ஆறுகள், நீர்நிலைகளின் தன்மை, ஆபத்தான பகுதிகள், தப்பிக்கும் மற்றும் மீட்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆசிரியர்கள், பெற்றோரின் பங்கு

நீச்சல் தெரியாதவர்கள் ஆறுகள், குளங்களில் இறங்கிக் குளிப்பதில் உள்ள ஆபத்துகளை பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், குடும்பத்தினரும் கட்டாயம் விளக்கிக் கூற வேண்டும். முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். முறையான நீச்சல் பயிற்சி பெற்ற குழந்தை தன்னம்பிக்கையோடு இருப்பதோடு, ஆபத்து நேரங்களில் தன்னையும், மற்றவர்களையும் காப்பாற்ற முடியும்.

மீட்புப் படையினரின் ஆலோசனைகள்

நீச்சல் தெரியாதவர்கள் ஒருபோதும் தண்ணீர் அதிகம் உள்ள ஆற்றிலோ, குளங்களிலோ இறங்கக்கூடாது. தண்ணீரில் தத்தளிப்பவரை, நீச்சல் தெரிந்தவர் மட்டும்தான் காப்பாற்றச் செல்லவேண்டும். நீச்சல் தெரியவில்லை என்றால் சத்தம்போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்கவேண்டும். நீச்சல் தெரிந்தவரும்கூட, தண்ணீரில் மூழ்குபவரின் தலை முடி, சட்டை, பனியன் போன்றவற்றை மட்டுமே பிடித்து இழுத்து வரவேண்டும். தண்ணீரில் தத்தளிப்பவர் உயிர் பயத்தில் காப்பாற்றச் செல்பவரையே அமுக்கியும், கட்டிப்பிடித்தும் நீச்சலடிக்க முடியாமல் செய்துவிட வாய்ப்பு உள்ளதால் ஒருபோதும் நெருக்கமாகச் சென்றுவிடக்கூடாது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    செயற்கை ஆறுமக்கள் பலிதஞ்சை புது ஆறுகல்லணைக் கால்வாய்காவிரி டெல்டா பாசனம்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author