Published : 29 Jan 2014 09:50 AM
Last Updated : 29 Jan 2014 09:50 AM

நீர்மூழ்கி கப்பலில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி- சென்னை துறைமுகத்தில் சோகம்

மாமல்லபுரம் கடல்சார் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்வதற்காக, சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், விஷவாயு தாக்கி பலியானார்கள். மற்றொரு ஊழியருக்கு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப் படுகிறது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் அருங்காட்சியகத்தில் நிறுத்தப் படுகிறது. அதற்காக, ஓய்வு பெற்ற ஐஎன்எஸ் வாக்லி என்ற நீர்மூழ்கி கப்பலை இந்திய கடற்படை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அருங்காட்சியகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப் படாததால் நீர்மூழ்கி கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

நீர்மூழ்கி கப்பலை பராமரிக்கும் பணியை மேற் கொள்ள அக்சயா மரைன் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. இந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மாதம் ஒருமுறை கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான வில்லிவாக்கத்தை சேர்ந்த பவானி சங்கர் (45) மற்றும் ஊழியர்களான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் (36), ஜெயக்குமார் (24) உட்பட 5 பேர் கப்பலில் உள்ள பழுதை சரிசெய்ய திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு சென்றனர்.

இரண்டு பேர் வெளியே நின்று கொண்டனர். பவானி சங்கர், மகேந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கப்பலுக்குள் சென்றனர். 2 மணி நேரம் ஆகியும் உள்ளே சென்றவர்கள் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த மற்றவர்கள் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த துறைமுகம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி அளவில் உள்ளே இருந்த 3 பேரையும் வெளியே தூக்கினர். பவானி சங்கர், மகேந்திரன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர். ஜெயக்குமாருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கப்பலில் விஷவாயு கசிந்ததால் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புக்குழுவினர் தெரிவித் தனர். விபத்துக்கான காரணம் குறித்து துறைமுகம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x