

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் 10 செ.மீ., தருமபுரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலமாகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால்,
தென்மேற்கு பருவமழை விலகிவிட்டதாக அறிவிக்கப்படும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் 15 முதல் 30-ம் தேதிக் குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.