அரசின் அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்: மகளிர் தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி உறுதி

அரசின் அனைத்து திட்டங்களிலும் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்: மகளிர் தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி உறுதி
Updated on
2 min read

அனைத்து திட்டங்களிலும் மகளிருக்கு சம உரிமை கிடைக்கச் செய்யும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி பெண்கள் நள்ளிரவு 12 மணியிலும் சுதந்திரமாக புதுச்சேரி பீச்சில் நடக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா முத்தியால்பேட்டையில் நடைபெற்றது.

விழாவை முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், விஜயவேணி, கோபிகா, செயலர் மிகிர்வர்தன், இயக்குனர் மீனாகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாநில விருது, மகளிர் தின விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் முதல் 1,500 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள் நினைத்தால் ஆட்சியை கொண்டு வரலாம். பெண்கள் வாக்கு அளித்துத்தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். ரூ. 6,665 கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 900 கோடி மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதியோர், மகளிர், விதவைகள் பென்ஷனே மாதம் ரூ. 23 கோடி செலவிடப்படுகிறது. இந்திய பெண்களின் திறமையும், சக்தியும் பெரியது. ராஜிவ்காந்தி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் கொடுத்தார். சோனியா சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க போராடினார்.

நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏக்களில் 5 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். 776 எம்.பி.க்களில் 100 பேர் மகளிர் உள்ளனர். பெண்கள் பொது வாழ்க்கைக்கும், அரசியலுக்கும் வரவேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க முழுமையாக ஆதரிப்போம்.

பெண்கள் பொறியியல் படித்து வெளிநாடுகளில் 16 மணிநேரம் வரை சம்பாதித்து பெற்றோருக்கு பணம் அனுப்புகின்றனர். ஆனால், ஆண்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை தாங்களே செலவு செய்து கொள்கின்றனர். அனைத்து திட்டங்களிலும் மகளிருக்கு சம உரிமை கிடைக்கச் செய்யும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி பெண்கள் நள்ளிரவு 12 மணியிலும் சுதந்திரமாக பீச்சில் நடக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம்.

ரவுடிகளை முற்றிலும் ஒழித்துள்ளோம். நிலம், வீடு அபகரிப்பை நிறுத்தியுள்ளோம். யார் தடுத்தாலும் கவலைப்படாமல் புதுச்சேரியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வோம். மக்களுக்காக நாங்கள், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவோம்.

மத்திய நிதி அமைச்சரை சந்தித்து தேவையான நிதியை தரவேண்டும் என்று கேட்டுள்ளேன். மத்திய அமைச்சரும் இறுதி வாக்குறுதி அளித்துள்ளதால் தருவார் என்று நம்புகின்றேன். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தினரையும், அமைப்பினரையும் பாதுகாப்பாக வாழச்செய்வது அரசின் கடமை. அதை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

விழா அழைப்பிதழில் ஆளுநர் பெயர் இல்லை

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கான அழைப்பிதழில், ஆளுநர் கிரண்பேடி பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கந்தசாமியின் காரை ஆனந்தா ஓட்டல் அருகே பாஜக மகளிர் அணியினர் மறித்தனர்.

உடனே அமைச்சர் கந்தசாமி காரை விட்டு இறங்கி மறியல் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பாஜகவினர் அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த கந்தசாமி அவர்களை பொருட்படுத்தாமல் அங்கிருந்து அருகில் உள்ள விழா மண்டபத்துக்கு நடந்தே சென்றார். பாஜகவினரும் அமைச்சரை பின்தொடர்ந்து கோஷமிட்டபடி சென்றனர்.

போலீஸார் அமைச்சரை பின்தொடர்ந்து சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது, பாஜகவினர் அமைச்சர் கந்தசாமி தங்களை அசிங்கப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர். பாஜக மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி உள்ளிட்ட 10 பெண்கள், கட்சியின் துணை தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in