

சிறுபான்மை மக்களின் வழி பாட்டு உரிமை, கலாச்சாரம், பண் பாட்டுக்கு எந்த பங்கமும் வராமல் உறுதியாக பாதுகாக்கப்படும் என இப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக (அம்மா) கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:
மறைந்த முதல்வர்கள் ஜெய லலிதா, எம்ஜிஆர் வகுத்தளித்த பாதையில் எங்கள் அரசு தொடர்ந்து செயல்படும்.
இஸ்லாமியப் பெருமக்களின் 5 பெரும் சமயக் கடமைகளில் ஒன்றான ரமலான் புனித மாதத்தின் நோன்புக் கடமை சொல்லற்கரிய பெருமையும், மகத்துவமும் வாய்ந்தது. மாற்றார் பசி அறிந்து, நம்மிடம் உள்ளதை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் சகோதரத்துவ பண்பு வளர வேண்டும். பசி, பஞ்சம், பட்டினி, இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு சகோதரத்துவ உணர்வும், சமயக் கட்டளைகளை இறை அச்சத்துடன் நிறைவேற்றும் தன்மையும் அடிப்படையான தேவைகளாகும்.
தனக்கு என்னென்ன நன்மை கள் எல்லாம் நிகழ வேண்டும் என்று ஒருவர் ஆசை கொள்கிறாரோ, அவை அனைத்தும் நம்மைச் சுற்றி வாழும் எல்லோருக்கும் நிகழ வேண்டும் என்ற சகோதர அன்பு உள்ள ஒருவரைத்தான் இறை நம்பிக்கை உடையவராக ஏற்க முடியும் என்று இறை தூதர் நபிகள் நாயகம் எடுத்துரைத்தார். அடுத்தவர்களை, ஏழை, எளியோரை, புறம் தள்ளப்பட்டோரை மகிழ்விக்கும் பொழுதுதான் நோன்பு நிறைவு பெறுகிறது என்று வாழ்ந்து காட்டினார் நபிகள் நாயகம்.
இந்த அரசு மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கை யில் உறுதியாக இருக்கும். சிறு பான்மை மக்களின் வழிபாட்டு உரிமை, கலாச்சாரம், பண் பாட்டுக்கு எந்த பங்கமும் வராமல் உறுதியாக பாதுகாக்கப்படும். சிறுபான்மை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கும் எங்கள் அரசு என்றும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
இவ்விருந்தில் தலைமை ஹாஜிக்கள் சலாவுதீன் முகமது அயூப், குலாம் முகம்மது மெகடிகான், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி, ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.அபு பக்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தனியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.