

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரைகளிலும், தாமிரவருணி உள் ளிட்ட ஆற்றங்கரைகளிலும், வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, பித்ரு கடன் தீர்த்தனர்.
ஓராண்டில் வரும் 14 அமாவாசைகளில், ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை தினங்கள் முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் ஆற்றங்கரை, கடற்கரை மற்றும் நீர் நிலைகளில், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். தை அமாவாசை தினமான வியாழக்கி ழமை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் ஏராளமானோர் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கடற்கரையில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியாததால் அதிகாலையில் திரண்ட மக்கள் இருட்டில் மிகவும் சிரமப்பட்டனர். அதிகமானோர் திரண்டதால் கடற்கரை மனித தலைகளாக காட்சியளித்தன.
திரேஸ்புரம் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூரில்...
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், கால சந்தி பூஜை, தீர்த்தவாரி நடைபெற்றது.
அதிகாலையிலேயே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ஏரல், திருவைகுண்டம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரைப் பகுதிகளிலும் ஏராளமானோர் திரண்டு தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருநெல்வேலி
தாமிரவருணி ஆற்றோரத்தில், பாபநாசம் முதல் ஏரல் வரையிலும் பல்வேறு இடங்களில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நெல்லையில் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் படித்துறை, குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜைகளைச் செய்தனர்.
குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அருகன்குளம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி
வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கே கன்னியாகுமரி வந்த பக்தர்கள், தங்களது முன்னோர்களை நினைத்து கடலில் புனித நீராடினர். கடற்கரையில் இருந்த புரோகிதர்களின் முன், பலி கர்ம பூஜைகளை செய்தனர். தொடர்ந்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கே பகவதியம்மன் கோயில் உள்பிரகார நடை திறக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் முடிக்கப்பட்டன.
காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கடலில் ஆராட்டு நிகழ்ச்சி, வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டிருந்தன. டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபோல் குழித்துறை தாமிரவருணி ஆறு, திற்பரப்பு அருவிக்கரை, பழையாற்றங்கரை மற்றும் நீர் நிலைகளில் ஏராளமா னோர் தர்ப்பணம் செய்தனர்.