புதிய சட்ட திருத்தங்களின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சங்க நிர்வாகிகளிடம் தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 6-ல் சென்னையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வழக்கறிஞர்களுக்கு பாதகமான அந்த திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை நானும் மற்றும் வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகளான சி. விஜயகுமார், எஸ்.அறிவழகன், வி.நளினி, எம்.ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் நேரில் சந்தித்து ஆலோசித்தோம்.

அப்போது இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சில திருத்தங்களில் தனக்கும் உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதியே எங்களிடம் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள எந்த வழக்கறிஞர் சங்கத்தினரும் தன்னிடம் நேரடியாக கோரிக்கை மனு அளித்தால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும், அதுவரை இந்த புதிய திருத்தங்களின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் உறுதியளித்தார்.
ஆனால் அதேநேரம், இந்த பிரச்சனைக்காக வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தால் என்னால் எந்த தீர்வும் காண முடியாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பதிலுக்கு நாங்களும், இந்த பிரச்சனைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவித்த சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தினோம். இதுதொடர்பாக பதிவுத்துறை மூலமாக எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய தலைமை நீதிபதி, ஆனால் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்தால் பார் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கையில் நான் தலையிட மாட்டேன் என்றும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிராக உள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என நாங்கள் தலைமை நீதிபதியை வலியுறுத்திவிட்டு வந்தோம் என்றார்.