

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பள்ளியில் புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தை திறக்க போலீஸார் திடீரென தடை விதித்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளிக்கு தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.70 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் செய்திருந்தனர். சுவரொட்டிகளும் அச்சடித்து அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தன.
விழாவில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உட்பட 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் நேற்று காலை பள்ளியில் திரண்டனர்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த விருகம்பாக்கம் போலீ ஸார், முறையான அனுமதி பெறவில்லை என்பதால் விழா ஏற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து தேமுதிக வினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விழாவை நடத்த போலீஸார் அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த தேமுதிகவினர் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத் தனர். பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தேமுதிகவினர் கூறும்போது, ‘‘விழா நடத்துவதற்கு ஏற்கெனவே முறைப்படி போலீஸ் அனுமதி வாங்கியிருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் வழங்கப் பட்ட அனுமதியை போலீஸார் ரத்து செய்துவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக போலீஸார் இப்படி செய்துள்ளனர்’’ என்றனர்.
விஜயகாந்த் கண்டனம்
எம்எல்ஏ மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதாவுக்கு வேண்டியவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்வரண் சிங்கின் மனைவி ஷீலா ஸ்வரண்சிங்தான் ஜெயகோபால் கரோடியா பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய தவறான நிர்வாகத்தால் ஏற்கெனவே பள்ளியின் தரம் மிகவும் தாழ்ந்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்த எம்எல்ஏவையே வரக்கூடாது என்று சொல்வதற்கு தலைமை ஆசிரியைக்கு என்ன தகுதி இருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்த உண்மை களை விசாரித்து தலைமை ஆசிரியை ஷீலா ஸ்வரண்சிங் மீதும் இதற்கு பொறுப்பான காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.