

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு விரல்களைக் காட்டி பிரச்சாரம் செய்வதில் தவறில்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். அதேபோல, சசிகலா தரப்பிலும் இரட்டை இலை சின்னம் கோரி மனு தரப்பட்டது. இதுகுறித்த இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்
பட்டது. பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக்கூடாது என்றும், ஏப்ரல் 17-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. சசிகலா தலைமையிலான அணியினருக்கு ‘தொப்பி’ சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு‘மின்விளக்கு’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு சதியே காரணம் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இரட்டை விளக்குகளோடு கூடிய மின்கம்பம் சின்னம் ஒதுக்கியதில் சந்தேகம் எழுவதாகவும் சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறித்து இருதரப்பினரும் பரஸ்பரம் கருத்து தெரிவித்து வருவதால், இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் இது எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
சின்னத்தில் மாற்றம் கூடாது
இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், அந்த சின்னம் குறித்து இருதரப்பினரும் பிரச்சாரத்தின்போது பேச முடியுமா என்பது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறும்போது, “தேர்தல் பிரச்சாரத்தின்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னம், ஆணையத்தின் இணையதளத்தில் எப்படி உள்ளதோ அதேபோன்றுதான் பிரச்சாரத்தின்போதும் பயன்படுத்த வேண்டும். சின்னத்தில் எந்தவித மாற்றத்தையும் செய்து பயன்படுத்தக்கூடாது. மேலும், இரண்டு விரல்களைக் காட்டி பிரச்சாரம் செய்வதற்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
விதி மீறினால் நடவடிக்கை
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளதால். அந்த சின்னத்தை எந்த வகையிலும் இருதரப்பினரும் பயன்படுத்தக்கூடாது. யாருக்கும் இரட்டை இலை சின்னம் வழங்கப்படாத நிலையில், அதை பற்றி பிரச்சாரத்தின்போது பேசினால் எங்கு, யார், எதற்காக பேசினார்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஆராயும். பின்னர், அதன் தன்மையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.