Published : 12 Dec 2013 06:47 PM
Last Updated : 12 Dec 2013 06:47 PM

கோவை: அரசியலாகும் அட்டப்பாடி விவகாரம்

அட்டபாடி விவசாயிகள் ஆதிவாசிகள் நிலத்திற்காக கேரள அரசு வெளியேற்ற உத்தரவிடுவதையும், அதில் உள்ள சாதகபாதக நிகழ்வுகளையும் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தது தி இந்து நாளிதழ்.

ஆதிவாசிகள் மூலமாக உள்ளூர் போலீசார் கிரிமினல் வழக்குத் தொடர்வதைக் கண்டு அஞ்சி நூற்றுக்கணக்கான அட்டப்பாடி விவசாயிகள் தங்கள் பூர்வீகமான கோவையில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைவதையும், அவர்கள் இங்குள்ள காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க தலைவர்களுக்கு மனு கொடுத்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற்போது, அட்டப்பாடி விவகாரம் தமிழக அரசியலில் அறிக்கை மயமாகவும், போராட்ட மயமாகவும் மாறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அட்டப்பாடி வாழ் தமிழ் விவசாயிகளை வெளியேற்றும் கேரள அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட பா.ம.க தலைவர் ராமதாஸ், ஒரு தலைப்பட்சமான செயல்பாட்டை கேரள தொடர்ந்து நடத்துமானால் பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கவுண்டர்கள் கட்சியான கொ.மு.க தனது கண்டனத்தையும், போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டது.

கடந்த திங்கள்கிழமை, நாம் தமிழர் கட்சி, கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பாக அட்டப்பாடி தமிழர்கள் வெளியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. 10ந் தேதி மாலை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கொ.மு.க, தமிழ்நாடு வணிகர் சங்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவை, உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், பா.ம.க, தமிழ்ப்புலிகள், தலித் விடுதலைக்கட்சி, காட்மா, கோப்மா, ஆதித்தமிழர் பேரவை, ஐ.ஜே.கே, பி.யு.சி.எல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடி அட்டப்பாடியில் ஆதிவாசி மக்களும், விவசாயிகளும், தமிழக மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தமிழக அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதை வலியுறுத்தி 14ம் தேதி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். கேரள முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியாயமான செயலா?

அதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் இது தொடர்பாக கேரள அரசை கண்டித்து அறிக்கை அனுப்பப்பட்டது. ஆதிவாசிகள் நிலத்தை எடுக்கிறேன் என்ற போக்கில் தமிழகத்திலிருந்து சென்ற விவசாயிகளிடமிருந்த நிலத்தை எடுத்து பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயற்சி செய்கிறார்கள் கேரள அதிகாரிகள்.

அதே கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலங்களை ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் பறித்துக்கொண்டுள்ளன. அந்த நிலங்களைப் பெற்று பழங்குடி இன மக்களுக்கு மீண்டும் வழங்க முயற்சி எடுக்காத கேரள அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை மட்டும் பறிக்க முயற்சிப்பது நியாயமான செயல் அல்ல.

அங்கே, தமிழர்களை வெளியேற்ற நினைத்தால் சென்னையில் கேரளத்தவர்கள் எந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள்? அவர்களை தமிழக அரசு வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டால் நிலைமை என்னவாகும்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். கூடவே, இந்தப் பிரச்சினை குறித்து கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு பேசி அட்டப்பாடியில் காலங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களை காப்பாற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அட்டப்பாடிக்குச் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

தலைவர்கள் ஆலோசனை

இந்த பிரச்சினை கோவையில் அரசியல் மயமானது. கொ.மு.க தலைவர் பெஸ்ட் ராமசாமி, இந்து மக்கள் கட்சி அர்ஜூன்சம்பத், கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை இரா.மணிகண்டன், அகில இந்திய தேவர் பேரவைத் தலைவர் காரைக்குடி கணேச தேவர் உள்ளிட்ட அமைப்பினர் தேசிய சமுதாயக் கூட்டமைப்பு என்ற இயக்கம் சார்பாக ஒரு தனியார் ஓட்டல் அரங்கில் கூட்டம் நடத்தினர்.

அவர்கள், ''கேரள மாநிலம் பிரிக்கப்பட்டது 1957ல். அதற்கும் முன்பே அட்டப்பாடியில் தமிழர்கள் குடியேறிவிட்டனர். கேரள-தமிழ்நாடு பங்கு பிரிப்பு என்பதிலேயே குறைபாடு உள்ளது. இப்போது கேரளத்தில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பகுதி தமிழகத்தில் சேர்த்திருக்க வேண்டியது. தவிர, 16 சதவீதம் மலையாள மக்கள் கோவையில் வசிக்கின்றனர். அட்டப்பாடி தமிழர்கள் வெளியேற்றப்பட்டால் இங்கு இரு மாநில மொழி பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

முதல்வர்கள் சந்திப்பு

எனவே இந்த விவகாரம் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். டிசம்பர் இறுதியில் இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. அதில் இந்த பிரச்சனை பேசி தீர்க்க வாய்ப்புள்ளது. அதில் ஏதும் நடக்கவில்லையென்றால் தேசிய சமுதாயக் கூட்டமைப்பு ஜனவரி மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்துள்ளனர்.

தற்போது, அட்டப்பாடியில் வாழும் தமிழக விவசாயிகள் மீதான நெருக்கடியை தவிர்த்துள்ளனர் கேரள அதிகாரிகள். எனவே, தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் படிப்படியாக அட்டப்பாடிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம், நில வெளியேற்ற உத்தரவில் பாதிக்கப்படும் விவசாயிகள் கேரள மொழி சிறுபான்மை நலச் சங்கம் அட்டப்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கி, அதற்கான கூட்டம் 18ம் தேதி அகழியில் நடப்பதாக அறிவித்துள்ளனர். அதற்கு கிராமம் கிராமமாக நோட்டீஸ் விநியோகமும் நடந்து வருகிறது.

காங்கிரஸ் தலையீடு

இது குறித்து அட்டப்பாடி விவசாயிகள் சிலரிடம் பேசியபோது, ''தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் குரல் கொடுத்த பின்புதான் எங்கள் மீதான நடவடிக்கை சிறிது குறைந்துள்ளது. குறிப்பாக, கோவை காங்கிரஸ் தலைவர்கள் கேரள காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியிருக்கின்றனர். அட்டப்பாடி விவகாரத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளில் பெரும்பான்மையோர் கேரள காங்கிரஸில், அட்டப்பாடி பிராந்தியத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர்.

அவர்கள் மீதே நடவடிக்கை எடுத்தால் கட்சி எப்படி அங்கே வளரும்? அவர்களுக்காக அங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுக்கமாட்டார்கள். அப்படியிருக்க நாமே நடவடிக்கை எடுத்தால் என்னாவது? என்று ஒரு காங்கிரஸ் தலைவர் எங்கள் கண் எதரிலேயே அங்குள்ள முக்கியஸ்தரிடம் பேசினார். அதற்குப் பிறகு, முதல்வர் உம்மன் சாண்டியை சந்திக்க அங்குள்ள காங்கிரஸாரே ஏற்பாடும் செய்தனர். அதன் பிறகுதான் இது இவ்வளவு தூரம் அரசியல் ஆகியிருக்கிறது. பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தி இந்து செய்தியும் துணை நின்றது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x