

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கிராமப்புற நூலகங்கள் தற்போது ரேஷன்கடையாக மாறியுள்ளன.
கிராமப்புற மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் தங்கள் அறிவை பெருக்கி கொள்ளும் வகையில் திமுக ஆட்சி காலத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 420 கிராமப்புற நூலகங்கள் தொடங்கப்பட்டன. நூலக பயன்பாட்டுக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தவிர்த்த பிற நாட்களில் காலை 8 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் இவை செயல்பட்டு வந்தன. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் நூலகராக பணி அமர்த்தப்பட்டனர்.
நாளிதழ்களுடன், பொது அறிவு, இலக்கியம், நாவல், வரலாறு, அறிவியல் புத்தகங்கள் நூலகத்துக்கு வழங்கப்பட்டன. காலை, மாலை நேரங்களில் நாளிதழ் படிப்பதுடன் கோடைகாலம், ஞாயிறு உள்ளிட்ட பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் நூலகங்களை நோக்கி படையெடுத்தனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பள்ளி கட்டுரை, பேச்சு போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களும் நூலகங்களை பயன்படுத்தினர். ஆனால் குறைவான சம்பளம் வழங்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான நூலகர்கள் அங்கே பணிபுரிய முன்வரவில்லை. கிராம அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்த நூலகங்களின் செயல்பாடு தற்போது செயல்படாமல் போய்விட்டது. சில இடங்களில் புதுவாழ்வு திட்ட அலுவலகம், ரேஷன் கடைகளாகவும் நூலகங்கள் மாற்றப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த நூலகம் சில மாதங்களாக ரேஷன் கடையாக செயல்பட்டு வருகிறது. இதனால் அறிவைப்பெருக்கிக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒவ்வொரு நூலகத்திலும் தூசி படிந்து பாழாகி வருகின்றன. இந்நூலகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதன்மூலம் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் மவுனம்
இந்த திட்டம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? மதுரை மாவட்டத்தில் தற்போது எத்தனை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் நூலக செயல்பாட்டுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.