

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் உடைப்பு, போலீஸார் தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை அம்மன்குளம் பகுதியில் மார்ச் 13-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த நாளில் அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தால், அதற்குப் பதிலாக மார்ச் 17-ம் தேதி (இன்று) நடத்திக்கொள்ளுமாறு வாய்மொழியாக தெரிவிக்கப்பட் டதாம். இதைத்தொடர்ந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்வது உள்ளிட்ட போட்டிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், திடீரென நேற்று மாலையில், மார்ச் 28-ம் தேதிக்குப் பிறகு ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ளலாமென அலுவலர்கள் மற்றும் போலீஸார் தெரிவித்தனராம்.
விராலிமலையில் தயாரான நிலையில் உள்ள ஜல்லிக்கட்டு களம்.
இதனால் விரக்தி அடைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விராலிமலையில் நேற்று மாலை சோதனைச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால் இதுதொடர்பாக வருவாய்த் துறை மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமாதானம் செய்தபோது பொதுமக்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், போராட்டத்தில் ஈடுபட்டோர் கற்களை எறிந்ததில் போலீஸாரின் வாகனம் மற்றும் சுமார் 4 அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது, போலீஸார் மீதும் பாட்டில்கள், கற்களை சிலர் வீசியுள்ளனர். இதனால் இரண்டு போலீஸார் உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விராலிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தால் விராலிமலை வழியாகப் பிரிந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர், இரவு 10 மணிக்குப் பிறகு படிப்படியாக போக்குவரத்து சீராகத்தொடங்கியது. சம்பவம் குறித்து திருச்சி ஐஜி வி.வரதராஜூ ஆய்வு செய்தார்.