Last Updated : 13 Jun, 2017 09:56 AM

 

Published : 13 Jun 2017 09:56 AM
Last Updated : 13 Jun 2017 09:56 AM

இந்தியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துகளுக்கு 77% ஓட்டுநர்களே காரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் 77 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களே காரணமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 5,01,423 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 1,31,726 விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளனர். 5,00,279 பேர் காயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிரிழந்தனர். 79,746 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துகளுக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டு நடைபெற்ற மொத்த விபத்துகளில் 77 சதவீத விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் அல்லது அந்த நேரத்தில் ஓட்டுநர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பிற காரணங்களைப் பொறுத்தவரை மற்ற வாகன ஓட்டுநர்களின் தவறால் 4.9 சதவீதம், வேறு காரணங்களால் 7.7 சதவீதம், வாகனப் பழுது காரணமாக 2.3 சதவீதம், பாதசாரிகளின் தவறு, பழுதான சாலைகளால் தலா 1.5 சதவீதம், பாறை விழுந்ததால் 0.2 சதவீதம், விலங்குகளின் குறுக் கீடுகளால் 0.3 சதவீதம், சைக்கிளில் செல்வோரால் 0.7 சதவீத விபத்து கள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கோவை மேற்கு வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் `தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:

விபத்துகளைத் தடுக்க வாகன ஓட்டுநர்கள் பின்புறம் பார்க்கும் கண்ணாடி, சைகை, செயல்படுதல், நிலை, வேகம், பார்வை எனும் ‘MSM / PSL’ தத்துவத்தை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ஓட்டுநரும், வாகனத்தை ஓட்டும்போதும், நிறுத்தும்போதும், ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போதும் ஓட்டுநர்கள் இந்த தத்துவத்தை கடைபிடித்தால் விபத்துகள் குறையும். இந்த விதி சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பொதுவானது.

சாலையில் செல்லும்போது பின்னால் வரும் வாகனத்தின் செயல்பாட்டை கண்ணாடி மூலம் கண்காணிக்க வேண்டும். அந்த வாகனம் வேகமாக வந்தால் அதை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். பின்னால் வாகனம் வராததை உறுதிசெய்த பின்னர் எந்த திசையில் வாகனத்தை திருப்ப வேண்டுமோ, அந்த திசை நோக்கி கை மூலமாகவோ அல்லது இண்டிகேட்டர் மூலமாகவோ சைகை காண்பித்து வாகனத்தைத் திருப்ப வேண்டும். அப்போது அடுத்த வாகனங்களின் சிக்னல்களையும் கவனிக்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்தும்போது சாலையின் இடதுபுறம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும். வாகனங்களை முந்தும்போது வலதுபுறமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லக்கூடாது. வாகனத்தில் செல்லும்போது சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x