சர்வதேச கும்பலுடன் தொடர்பு: சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய திருவள்ளூர் டிஎஸ்பி இடைநீக்கம்

சர்வதேச கும்பலுடன் தொடர்பு: சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய திருவள்ளூர் டிஎஸ்பி இடைநீக்கம்
Updated on
2 min read

கைது செய்யாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி

சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டுசேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலை களைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி காதர்பாஷா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

மதுரை தெற்கு வெளி வீதியில் கேமரா பழுதுபார்க்கும் சுந்தரமூர்த்தி என்பவரிடம் இருந்து 30 கிலோ பழங்கால சாமி சிலை களைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த காதர் பாஷா, காவலர் சுப்புராஜ் ஆகி யோர் கைப்பற்றியுள்ளனர். அதன் பிறகு, சுந்தரமூர்த்தி கொடுத்த தகவலின்பேரில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிடம் இருந்து ஏராளமான சிலை களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகச் சிலைகளை அந்த ஆய்வாளரும், காவலரும் சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான காதர்பாஷா தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் டிஎஸ்பியாக உள்ளார். சுப்புராஜ் கோயம்பேடு உதவி ஆய்வாளராக உள்ளார். இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், சிபிசிஐடி எஸ்.பி. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது நடந்த வாதம்:

நீதிபதி ஆர்.மகாதேவன்:

டிஎஸ்பி காதர்பாஷாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? அவர் எங்கு இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? உடனடியாக அவரை கைது செய்யுங்கள்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணிபுரியும் காதர்பாஷா தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்:

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் போதிய போலீஸ் அதிகாரிகள் இல்லை. இருக்கிற அதிகாரிகளை வைத்துதான் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. எனவே சிறிது அவகாசம் தேவை.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதி தனது உத்தர வில், ‘‘டிஎஸ்பி காதர்பாஷாவை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தற்போதைய நிலை குறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் 30-ம் தேதி (இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

இதற்கிடையே, சர்வதேச கடத் தல் கும்பலோடு, சிலை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட் டுள்ள டிஎஸ்பி காதர்பாஷாவை தமிழக அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சுப்புராஜ் சில நாட்களுக்கு முன்பு கைது செய் யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in