

திமுக துணைப் பொதுச்செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சற்குண பாண்டியன் (75) சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில மாதங்களாக உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சற்குண பாண்டியன், சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார். தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்த இவர், 13 வயதிலேயே திமுக மேடைகளில் பேச்சாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். வட சென்னை மாவட்ட மாணவரணி, மகளிரணி செயலாளர், மாநில மகளிரணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என திமுகவில் பல் வேறு பொறுப்புகளை வகித் துள்ளார்.
1971-ல் சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினர், 1989, 1996-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ, 1996-ல் சமூக நலத் துறை அமைச்சர், 2006-ல் மாநில மகளிர் ஆணையத் தலைவர் என பல்வேறு பதவிகளில் பணி யாற்றியுள்ளார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து இவரது மருமகள் சிம்லா முத்துச்சோழன் போட்டி யிட்டார்.
ராயபுரம் இல்லத்தில் வைக்கப் பட்டுள்ள சற்குண பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
3 நாள் துக்கம்
சற்குண பாண்டியன் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவையொட்டி இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது.
கருணாநிதி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சற்குண பாண்டியன் மரணச் செய்தியை கேட்டு எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். மேடை பேச்சாளராக திமுகவில் அறிமுகமாகி துணைப் பொதுச்செயலாளர் வரை உயர்ந் தவர். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் தவறியதே இல்லை. அண்ணாவால் சொல்லின் செல்வி என பாராட்டப்பட்டவர். திமுக நடத்திய அனைத்து போராட்டங்களுக்கும் மகளிர் படையை திரட்டி வந்தவர். இவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திமுகவினர் குறிப்பாக மகளிர் அணியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் சற்குண பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சற்குண பாண்டியன் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.