Published : 15 Apr 2015 05:32 PM
Last Updated : 15 Apr 2015 05:32 PM

இந்துத்துவாவுக்கு அதிமுக அரசு ஆதரவு: தி.க. குற்றச்சாட்டு

'மத்தியில் ஒரு இந்துத்துவா ஆட்சி; மாநிலத்திலும் அதன் மறுவடிவ ஆட்சி என்றால், நாட்டு நிலைமை என்னாவது?' என்று திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அம்பேத்கரின் 125-ம் ஆண்டு பிறந்த நாளில் (14.4.2015) சென்னை பெரியார் திடலில், பெண்களின் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்தும் நடத்துவது என்று திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியால் அறிவிக்கப்பட்டது.

இவ்விரண்டும் சட்ட விரோதமான செயல்பாடுகள் இல்லை; திராவிடர் கழகத்தின் கொள்கை நிலைப்பாடே. இதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. ஆனாலும், சில இந்துத்துவ அமைப்பினர் இதனை எதிர்த்துப் புகார் செய்தனர் என்ற அடிப்படையில் சென்னை வேப்பேரி காவல்துறை உதவி ஆணையரால் தடை செய்யப்பட்டது. திராவிடர் கழகம் மேற்கொண்ட சட்ட ரீதியான நடவடிக்கையின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இரவு பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் காவல்துறை தடை நீக்கப்பட்டது.

திட்டமிட்டபடி அம்பேத்கர் 125 ஆம் ஆண்டு பிறந்த நாளான 14.4.2015 அன்று காலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் தாங்களாக முன்வந்து 21 இணையினர் தாலியை அகற்றிக் கொண்டனர். இது திராவிடர் கழகத்தின் கொள்கைத் திட்டம் அடிப்படையிலானது. சட்டப்படியானதும்கூட.

தனி நீதிபதி ஆணையின்மீதான மேல்முறையீட்டில் பெரியார் திடல் நிகழ்ச்சிக்குத் தடை என்றவுடன், வேறு நிகழ்ச்சிகளை நடத்தாமல் நிறுத்திக் கொள்ளப்பட்டதாக கழகத் தலைவர் அறிவித்துவிட்டார்; அத்தோடு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

காவல்துறைக்கு முன்பே தெரிந்த சிவசேனாவின் வன்முறை

நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் சிவசேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் பெரியார் திடலை முற்றுகையிட இருப்பதாக பெரியார் திடலின் வெளியில் இருந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்குத் தெளிவாக தெரிந்திருந்த நிலையில், சிவசேனாவைச் சேர்ந்தவர்களை பெரியார் திடல் நுழைவு வாயில்வரை வர எப்படி அனுமதித்தனர் என்பது அதிர்ச்சிக்குரியது.

வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் திடல் வாயில் முன் கேட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த நிலையில், காவல்துறையினர், முற்றுகையிட வந்த சிவசேனாவினரைத் தடுக்காமல், கருப்புச் சட்டை அணிந்திருந்திருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது எந்த வகையில் சரி?

திராவிடர் கழகம் என்றால் கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது - வன்முறைக்கு அப்பாற்பட்டது என்பது வேறு எந்தத் துறையையும்விட, காவல்துறைக்கு அதிகமாகவே தெரியுமே? தெரிந்திருந்தும் கருப்புச்சட்டைக்காரர்களை தாக்கலாமா?

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.குணசேகரன், தஞ்சை இளவரசன், பெரியார் திடல் சுரேஷ் மற்றும் பழனி தோழர்கள் அழகர்சாமி, பெரியார் இரணியன் ஆகிய தோழர்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; 108 வாகனம் வரவழைக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மண்டையில், கைகளில் அடிபட்ட காரணத்தால், பல தையல்கள் போடப்பட நேர்ந்தன.

பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், சிவசேனாகாரர்கள் பெரியார் திடலை முற்றுகையிட வந்ததை அனுமதித்ததையும், (அவர்கள் வருவது காவல் துறைக்கு முன்னதாகவே தெரியும்) தடுக்க முனைந்த திராவிடர் கழகத் தோழர்களைத் தாக்கியதையும் வைத்துப் பார்க்கும்பொழுது - நிச்சயம் ஒரு சந்தேகந்தான் ஏற்படுகிறது.

சட்ட ஒழுங்குப் பிரச்சினையும், காவல்துறையும்

பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி விருந்தும் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசு தரப்பில் சொல்லப்பட்டதற்கு வலு சேர்க்கும் முறையில், காவல்துறையின் உதவியோடு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு இருக்கக்கூடும் என்று முடிவு செய்ய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. காவல்துறை நடந்துகொண்ட விதம் இத்தகைய ஐயப்பாட்டைஏற்படுத்துகிறது.

தாங்கள் விதித்த தடையை உடைத்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தினர் வெற்றிகரமாக நடத்திவிட்டனரே என்ற ஆத்திரம் - கோபம் காவல்துறைக்கும், மேலிடத்திற்கும் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயப்பாட்டை காவல்துறையின் நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

வெளியூரிலிருந்து பெரியார் திடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, நேற்றிரவு (14.4.2015) ஊருக்குச் செல்லுவதற்குப் பெரியார் திடலிலிருந்து வெளியில் சென்ற தோழர்களை காவல்துறையினர் கைது செய்து, இரவு முழுவதும் போலீஸ் ஜீப்பில் அலைக்கழித்து, இன்று (15.4.2015) காலை மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தி, 15 நாள்கள் சிறையில் வைப்பதற்கான ஆணையைப் பெற்றுள்ளனர்.

போலீஸ் தடியடியால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோழர்களுக்கு உதவியாக இருந்த சென்னை பெரியார் திடலில் பணியாற்றும்கே.கலைமணியை, மருத்துவமனை வளாகத்திலேயே கைது செய்தனர்.

ஒன்பது கழகத் தோழர்களையும் புழல் சிறைக்கு அழைத்துச் சென்று, திடீர் யோசனைக்குப் பின், அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 147, 148, 341, 294(தீ), 323, 324, 506(வீவீ) அய்.பி.சி. பிரிவுகளில் கழகத் தோழர்கள்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளிலும் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

தோழர்கள் கலைமணி, சவுந்தரராசன், வினோத், ராஜேஷ், ரவி, மகேந்திரன், திராவிடமணி, வனவேந்தன், அய்யப்பன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

புகார்மீது நடவடிக்கை என்பது ஒரு வழிப் பாதையா?

இதில் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்தும் நடந்தால், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்னவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கடிதம்மூலம் கழகத்தின் துணைத் தலைவரால் காவல்துறை ஆணையருக்குத்தெரிவிக்கப்பட்டும் இருந்தது.

ஆனால், அந்தப் புகார்மீது எந்தவித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை. தனியார்த் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன், ‘‘14.4.2015 அன்று பெரியார் திடலில் தி.க. நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்று செய்யப் போகிறோம்; அதனை நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று இப்பொழுது சொல்லமாட்டேன்; ஒன்று நடக்கும்; இப்பொழுது சொன்னால், போலீஸார் என்னைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்’’ என்று சொன்னாரே, அதனைத் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி 11.4.2015 நாளிட்ட ‘விடுதலை’ அறிக்கையிலும் குறிப்பிட்டு இருந்தாரே, அதன் அடிப்படையில் ராமகோபாலன்மீது இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

நேற்று அதன்படிதானே நடந்துள்ளது. சிவசேனா குண்டர்களிடமிருந்து நான்கு வெடிண்டுகள், கடப்பாரை, சுத்தியல் போன்ற ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆட்டோ பறிமுதல் என்பன போன்றவழக்கு.

நாம் புகார் கொடுத்தால் அதன்மீது காவல்துறையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.அதேநேரத்தில், இந்துத்துவாவாதிகள் புகார் கொடுத்தால், அதனை கண்களில் ஒத்திக்கொண்டு சட்டப்படியாக நாம் நடத்தும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கின்றனர் என்றால், இதன் நிலையை நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் தமிழக அரசின் செயல்பாடா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

புகார் கொடுத்தால் தடையா?

இந்தப் பிரச்சினையில் இன்னொன்று மிகமிக முக்கியமானது. ஓர் இயக்கம் அல்லது ஓர் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியைத் தடை செய்யச் சொல்லி, அந்த இயக்கத்துக்கும், அமைப்புக்கும் எதிரான - விரோதமான கொள்கையுடைய அமைப்புகளோ, தனி மனிதர்களோ காவல்துறையில் புகார் கொடுத்தால், அதனை ஏற்றுக்கொண்டு எந்த நிகழ்ச்சியையும் தடை செய்துவிடலாம் என்ற ஓர் எண்ணம் ஏற்படுவதற்குக் காவல்துறை துணை போகுமானால், நாட்டில் எந்த ஓர் இயக்கமும், அமைப்பும், கட்சியும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவே முடியாது.

தங்களுக்குப் பிடிக்காத கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது; நடத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று புகார் கொடுக்க ஒவ்வொரு அமைப்புகளும் முயன்றால், மிரட்டினால் அதன் விளைவு என்னாகும் என்று காவல்துறை நினைக்கவேண்டாமா?

கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும், எழுத்துரிமைக்கும், பிரச்சார உரிமைக்கும் ஆதரவாக நின்று, அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதுதான் காவல்துறையின் வேலையே தவிர, எதிர்ப்பவர்கள் பக்கம் நின்று அடிப்படை உரிமைகளுக்குத் தடையை ஏற்படுத்துவது ஜனநாயக முறைக்கு உகந்ததல்ல.அது பாசிசத்துக்குத் துணைபோவதாகும்.

இந்த முறையில் காவல்துறை செயல்படுமேயானால், அதன்மீதான நம்பகத்தன்மையை அது இழக்கும்; அது நாட்டு அமைதிக்கும், உத்தரவாதப்படுத்தப்படவேண்டிய உரிமைக்கும் எதிரானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிடர் கழகத்தின் தேவை

அரசியலுக்கு அப்பால் நின்று தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, புத்தாக்க சமுதாயத்தை உருவாக்க ஒல்லும் வகையில் உழைத்துவரும் ஒரு பகுத்தறிவு முற்போக்கு இயக்கத்திற்கு அரசு துணைபோக வேண்டியது கட்டாயம் என்பதை மறந்துவிடக் கூடாது.

அரசே மூடநம்பிக்கைச் சாதியில் மூழ்கிக் கிடக்குமேயானால், மதவாத சக்திகளுக்குத் துணைபோகுமானால், அதன் விளைவு இப்படித்தான் விரும்பத்தகாத நிலைக்கு ஊக்கம் கொடுக்கும்.. மத்தியில் ஒரு இந்துத்துவா ஆட்சி; மாநிலத்திலும் அதன் மறுவடிவ ஆட்சி என்றால், நாட்டு நிலைமை என்னாவது? நீறுபூத்த நெருப்பை அலட்சியமாகக் கருதவேண்டாம்'' என பூங்குன்றன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x