Published : 08 Aug 2016 06:02 PM
Last Updated : 08 Aug 2016 06:02 PM

சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர விட மாட்டோம்: கி.வீரமணி உறுதி

சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக்கொள்கையை கொண்டுவர விட மாட்டோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி கி.வீரமணி கூறியதாவது:

''பழைய குலக்கல்வி திட்டத்தின் புதிய பதிப்புதான் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பறிக்கும் கொள்கை இது.

மாநில உரிமைகளை பறிக்கும் கொள்கை. கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தவர் பெரியார். இது பெரியார் பிறந்த மண். சமூக நீதிக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர விட மாட்டோம்.

புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் ஆண்-பெண் இருபாலர் கல்வி என்பது இருக்காது. ஆண், பெண் பேதம் உருவாகும். சமத்துவம் பறிபோகும். இந்த வரைவு அறிக்கையில் இடஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை. பழைய குலக்கல்வி முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஆபத்து. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். சமூகநீதிக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்'' என்று கி.வீரமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x