

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் குரூப்-2 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த தேர்வுக்கு 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி.யை சென்றடைந்ததா என்ற விவரம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, குரூப்-2 தேர்வு நடைபெறும் டிசம்பர் 1-ம் தேதி அன்று ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு தொடங்குவதால், தேர்வு தேதி மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குருப்-2 தேர்வு டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. உறுதியாக தெரிவித்தது.
ஆன்லைனில் ஹால்டிக்கெட்
இந்த நிலையில், குருப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதன்கிழமை ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
குருப்-2 தேர்வு (நேர்முகத்தேர்வு பணிகள் கொண்ட தேர்வு) டிசம்பர் 1-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தகுதிவாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் இருந்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாற்று ஏற்பாடு
விண்ணப்பம் நிராகரிப்பு பட்டியலில் இடம்பெறாத, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள் கட்டணம் செலுத்தியதற்கான செலானின் நகலுடன் (ஸ்கேன் காப்பி) பெயர், குருப்-2 தேர்வுக்கான பதிவு எண், விண்ணப்பம், தேர்வுக்கூட்டண தொகை, செலுத்திய இடம் (அஞ்சலகம், இந்தியன் வங்கி), கிளை ஆகிய விவரங்களுடன் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.