Published : 11 Nov 2013 03:35 PM
Last Updated : 11 Nov 2013 03:35 PM

தமிழகம் முழுவதும் ரூ.189 கோடியில் புதிய பாலங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் 189 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 189 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களையும், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாராபுரம் புறவழிச்சாலையையும், 2 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதிலும் பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, கோயம்புத்தூர் ஈச்சனாரியில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்.209-ல் ரயில்வே கடவு எண் 150-க்கு மாற்றாக 516.08 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால் பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் கிணத்துகடவு போன்ற நகரங்களிலிருந்து கோயம்புத்தூர் மாநகருக்கு வந்து செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்களின் போக்குவரத்து எளிதாவதோடு, பயண நேரமும் வெகுவாக குறையும். இந்த மேம்பாலம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு 6 மாதங்கள் முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 16 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ; காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில் 29 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.37-க்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி விழுப்புரம், கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி திருவாரூர், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 202 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை உசிலம்பட்டியில் இராமநாதபுரம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய பாலங்கள், கட்டிடங்கள் 16 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புறவழிச்சாலை மற்றும் கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் கோயம்புத்தூர் வடக்கில் தேசிய நெடுஞ்சாலை எண். 209-ல் கணபதி அருகில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 520.47 மீட்டர் நீளத்திற்கு கூடுதல் இருவழி மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x