

கருணைராஜ், டாக்டர் ராஜசேகர், கலைராஜ், தர்மதேவன், மைக்கேல்ராஜ், சிவராஜ் - யார் இத்தனை நபர்கள் என்ற கேள்விக்கு ஒரு ரூபத்தை காட்டி பதில் அளிக்கிறார் மைக்கேல் சூசை. பெயர்கள் புதுவிதம், அவர் செய்த மோசடிகள் பலவிதம்.
மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் சூசை. கடந்த 2002-ல் அவரது மனைவி ராஜேஸ்வரியை, வீட்டில் டிரைவராக வேலை பார்த்த காஞ்சிபுரத்தை சேர்ந்த சுப்ரமணியம் அழைத்துக்கொண்டு கள்ளத்தோணி மூலமாக இந்தியா வருகிறார்.
குடும்பத்தில் ஒருவனாக பழகியவன், தனது இரு குழந்தைகளும் பரிதவிக்குமாறு மனைவியை இழுத்துச் சென்றுவிட்டானே என்ற ஆத்திரத்தில் ஒரு திட்டத்தை தீட்டுகிறார் மைக்கேல் சூசை. அதன்படி, கடந்த 2003-ம் ஆண்டில் மலேசியாவில் ஒரு சடலத்தை தயார் செய்து எரித்துவிட்டு தான் இறந்துவிட்டதுபோல் ஏற்பாடு செய்கிறார். வழக்கை விசாரித்த அங்குள்ள போலீஸ், மைக்கேல்சூசை இறந்துவிட்டதாக தெரிவிக்க இறப்புச் சான்றிதழ் பெறுகிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து கள்ளத் தோணியில் இந்தியா வருகிறார். பின்னர், ஆந்திராவில் சிறிது நாட்கள் தங்கியிருக்கும் மைக்கேல் சூசை, மச்சக்காரி (எ) ஜெயந்தியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். பின்னர் காஞ்சிபுரம் சென்று சுப்ரமணியன் குறித்து விசாரிக்கிறார். சுப்ரமணியனும், ராஜேஸ்வரியும் காஞ்சிபுரம் செய்யாறு பகுதியில் வசிப்பதைத் தெரிந்து, அங்கு சென்று மறைவாக இருந்தபடி கண்காணித்து சுப்ரமணியனை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார்.
கூலிப்படையை அமைத்து ஆசை வார்த்தைக் கூறி சுப்ரமணியனை காரில் அழைத்துச் சென்று செய்யாறு பகுதியில் எரித்து கொலை செய்கின்றனர். 3 நாட்கள் கழித்தே ராஜேஸ்வரிக்கு தெரியவருகிறது சுப்ரமணி கொலை செய்யப்பட்ட தகவல்.
தடுமாறிய போலீஸ்
இந்த கொலை குறித்து செய்யாறு போலீஸ் வழக்குப் பதிந்தது. ஆனால் கடந்த 2010 வரை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் பல்வேறு மோசடிச் செயல்களில் ஈடுபடுகிறார் சூசை.
மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து ஒவ்வொரு நகரமாக சென்று லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு தலைமறைவாகி விடுவாராம். இவ்வாறு தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதி களிலும் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி கோடிக் கணக் கில் பணம் சம்பாதித்து ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார்.
கோவையில் வழக்கு
இதனிடையே, கடந்த 2010-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மைக்கேல்ராஜ் என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கிறார். அப் போதைய காவல் ஆணையர் சைலேந்திரபாபு, தனிக்கவனம் எடுத்துக் கொண்டு விசாரணையை முடுக்குகிறார்.
இறுதியாக, கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தஞ்சாவூர் பகுதியில் நட்சத்திர தங்கும் விடுதியில் வைத்து கைது செய்கிறது போலீஸ். அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவரது கைவரிசையும், குற்றங்களும் அடுக்கடுக்காக வெளிவர வழக்கை விசாரித்த போலீஸார் அதிர்ச்சி அடைகின்றனர்.
மனைவிக்கு அதிர்ச்சி
அவர் கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப் படுகிறது. விசாரணையில், தமிழகத்தில் கணக்கு வழக்கு இல்லாமல் கைவரிசை காட்டிய தும், செய்யாறு கொலையும் அம்பலத்துக்கு வருகிறது. தனது முதல் கணவன் இறந்துவிட்டான் என நினைத்து இருந்த ராஜேஸ்வரிக்கும் அதிர்ச்சி.
கோவை மாநகரில் அவர் அரங்கேற்றிய மோசடி தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் 7 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் மீதான இரு மோசடி வழக்குகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த வழக்குகளின் சாட்சிகள் விசாரணை நேற்று நடைபெற்றது. வரும் மாதத்தில் வழக்கின் மீதான தீர்ப்பு இருக்கலாம் என்கிறார் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.மரியமுத்து.
தற்போது, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல்சூசையை வெளியே எடுக்க ஒரு நெட்வொர்க்கே முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.