

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த பாலமுருகன் சிலை திருடுபோனதாக புதிதாக வெளியாகியுள்ள தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள் ளனர்.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இங்கு 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் உற்சவ சிலை உள்ளது. இந்த சிலையின் கை பாகத்தில் பின்னம் ஏற்பட்டுள் ளதால், சிலையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், கோயில் நிர்வாகம் உற்சவர் சிலைக்கு பதிலாக நன்கொடையாளர்கள் மூலம் புதிய உற்சவர் சிலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த (ஸ்கந்தர்) பாலமுருகன் சிலை கடந்த 1993-ம் ஆண்டு திருபோனதாகவும், அதற்கு பதில் வேறொரு சிலை பயன்படுத்தப்பட்டு வருவதாக புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருடுபோனது
இதுகுறித்து, அண்ணாமலை என்ற பக்தர் கூறியதாவது: உற்சவர் சிலை தொடர்பாக சில தகவல்களை பெற இந்து அறநிலையத்துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். இதில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலைக்கு நடுவில் இருந்த பாலமுருகர் சிலை கடந்த 1993-ம் ஆண்டு திருடுபோனதாகவும் இது தொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், திருடப்பட்ட சிலைக்கு பதிலாக கடந்த 20 ஆண்டுகளாக மாற்று சிலை அமைத்து பயன்பாட்டில் உள்ளது. நன்கொடையாளர்கள் மூலம் புதிய சிலை செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழமையானது அல்ல
இதுகுறித்து, ஏகாரம்பரநாதர் கோயிலின் முன்னாள் அறங் காவலர் ரகு கூறியதாவது: கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலராக இருந்தேன். என்னுடன் மேலும் 5 பேர் அறங்காவலர்களாக இருந் தனர். உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த ஸ்கந்தர் சிலை திருடுபோன சம்பவம், எனது பதவி காலத்தில் தெரியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு உற்சவர் சிலை பின்னம் தொடர்பாக, அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அளித்த அறிக்கையில், உற்சவர் சிலையில் உள்ள ஸ்கந்தர் சிலை பழமையானதல்ல என, தெரி வித்துள்ளார்.
மீட்க கோரிக்கை
இது தொடர்பாக விசாரித்தபோது, சிலை திருடுபோன சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை ஆழ்வார் பேட்டையில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ஏகாம்பரநாதர் கோயிலின் ஸ்கந்தர் சிலை உள்ளதா என, அறநிலையத்துறை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு இருப்பின், மீண்டும் ஸ்கந்தர் சிலையை உற்சவருடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாற்று சிலை
இதுதொடர்பாக, ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது: சிலை திருடுபோனதாக, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த 1993-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆணையரின் அனுமதி பெற்று, திருடு போன சிலைக்கு பதிலாக மாற்று சிலை அமைக்கப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழமைவாய்ந்த உற்சவர் சிலை திருடுபோனதாக புதிதாக வெளியாகியுள்ள தகவலால், பக் தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத் தின் முன்னாள் அறங்காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.