

கன்னியாகுமரி மாவட்டம், முழுவதும் மரம் நடும் பணியில் நீண்ட காலமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமைமையாசிரியர் ஜோ.பிரகாஷ் `ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதே தன் வாழ்வின் லட்சியம்’ என தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவரது சுற்றுச் சூழல் பணியை அங்கீகரித்து மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கிணாவிளையைச் சேர்ந்தவர் ஜோ.பிரகாஷ். மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தேசிய பசுமைப்படை அமைப்பின் குமரி மாவட்டத் தலைவராக உள்ள இவர், அந்த அமைப்பின் மூலம், மாவட்டம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். வழக்கமாக பல இடங்களிலும், மரம் நடுதல் சம்பிரதாயமாகவே நடக்கும் நிலையில், இவர் தம் அமைப்பின் மூலம் மரங்களின் வளர்ச்சி குறித்து பின் தொடரவும் செய்கிறார்.
தனது இந்த முயற்சி குறித்து `தி இந்து’விடம் ஜோ.பிரகாஷ் கூறியதாவது: ``குழித்துறை கல்வி மாவட்டத்தில் 100 பள்ளிகளிலும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 100 பள்ளிகளிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 பள்ளிகளிலும் தேசிய பசுமைப்படையை அமைத்துள்ளோம். அவற்றின் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, சுற்றுச் சூழல் மேன்மையின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவத் தளத்துக்குள் நுழைகிறோம். அவர்களுக்கு மரங்களின் பயன்கள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் இன்றியமையாமை குறித்தும் விளக்கிக் கூறுகிறோம்.
விருதுகள்
உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை குறித்து நேரடி கள ஆய்வு செய்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றை ஆதாரமாகக் கொண்டு பள்ளிகளில் கழிவு மேலாண்மை பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.
கல்விப் பணியை பொறுத்தவரை நல்லாசிரியர் விருது, ஆசிரியர் திலகம் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளேன். சுற்றுச்சூழலில் கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசு சுற்றுச்சூழல் சுடரொளி விருது வழங்கியது. 2011-ம் ஆண்டு மத்திய அரசு `ப்ரியாவரன் மித்ரா’ என்னும் விருதை வழங்கியது. இதன் பொருள் சுற்றுச்சூழலின் நண்பன் என்பதாகும்.
சினிமாக்களில்..
கலைத் துறையிலும் ஆர்வம் அதிகம். அதனால் இப்போது தமிழ், மலையாளத் திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதிலும் சுற்றுச்சூழல் தகவலை சொல்லும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்கிறேன். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிற்றாறு அணைப் பகுதி, வெள்ளியோடு, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 85,000 மரங்கள் நட்டுள்ளோம். ஒரு லட்சம் மரங்கள் மாவட்டம் முழுவதும் நடுவதே எனது ஒரே லட்சியம்” என்றார்.