

வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கிசான் ஜாம் பாட்டிலில் கண்ணாடி துகள்கள் இருந்ததால் அதைத் தயாரித்த ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சாவித்திரி அனந்தராமன், மயிலாப்பூரில் உள்ள வட சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
“நான் என் மகனுக்கு ரொட்டியில் ஜாம் தடவிக் கொடுப்பதற்காக மளி கைக் கடை ஒன்றிலிருந்து 7.8.2000 அன்று ரூ.23 கொடுத்து கிசான் ஜாம் பாட்டிலை வாங்கினேன். வீட்டிற்கு வந்து அந்த ஜாமை ரொட்டியில் தடவியபோது அதில் கண்ணாடி துகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தேன். இதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் லீவர் உணவு பொருள் பிரிவின் கீழ் வரும் மீரா ஏஜென்சி, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ஒப்பந்ததாரர் காரி மரோன் அண்டு கோ நிறுவனம் ஆகியவற்றிடம் இழப்பீடாக ரூ. 53 ஆயிரத்து 523 தரவேண்டும் என்று நுகர்வோர் நீதி மன்றத்தின் மூலமாகச் சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டது.
ஆனால் அறிவிப்பு பற்றி நிறுவனங்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் கண்ணாடி துகள்கள் நிறைந்த ஜாம், அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது” என்று தன்னுடைய மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒப்பந்ததாரர் காரி மரோன் அண்டு கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் சாவித்திரியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை 27.9.2012 அன்று தள்ளுபடி செய்தது.
பின்னர் இந்த மனு தொடர்பாக நுகர்வோர் நீதி மன்றத்தின் தலைவர் ஆர். மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் டி. கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜாம் பாட்டிலில் கண்ணாடி துகள்கள் இருந்தது அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆய்வகத்தின் சார்பில் உறுதி செய்யப்பட்டதால், ஹிந்துஸ்தான் லீவர் உணவுப் பொருள் பிரிவின் கீழ் வரும் மீரா ஏஜென்சி, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ஒப்பந்ததாரர் காரி மரோன் அண்டு கோ நிறுவனம் ஆகியவை மனுதாரரை அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இம்மூன்று நிறுவனங்களும் இணைந்து மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 30 ஆயிரமும், வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று தேவையில்லாமல் அலைக்கழித் ததற்காக ரூ.10 ஆயிரமும் ஆக ரூ.40 ஆயிரத்தை ஆறு வாரக் காலத்துக்குள் வழங்கிட வேண்டும் என தீர்ப்பளித்தனர்.