

சிறையிலிருந்து சென்னை வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை 16 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இருபுறமும் அதிமுகவினர் திரண்டு பூக்கள் தூவி, மேளதாளத்துடன் வரவேற்றனர்.
உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 3.15 மணிக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்தில் இருந்து காரில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானத்தில் மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர் சின்னையா தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள், மகளிரணி, இலக்கிய அணி, பாசறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்.
இதையடுத்து, ரேஞ்ச் ரோவர் காரில் சசிகலா மற்றும் இளவரசியுடன் போயஸ் தோட்டத்துக்கு ஜெயலலிதா புறப்பட்டார். மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை வழியே 6.05 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். வழியில், கோட்டூர்புரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் முன்பு ஒரு நிமிடம் காரை நிறுத்தச் சொல்லி, சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்.
ஜெயலலிதாவை வரவேற்க நேற்று காலையில் இருந்தே மழையில் அதிமுகவினர் பல இடங்களில் திரண்டிருந் தனர். விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை ஆங்காங்கே கூடியிருந்தனர். சாலையோரங்களில் மனித சங்கிலிபோல கைகோர்த்து காத்திருந்தனர். ஜெயலலிதாவின் வாகனம் தங்களை கடந்து சென்றபோது, கையெடுத்து கும்பிட்டும், இரட்டை விரலை காட்டியும் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பலர் கார் மீது மலர்களை தூவினர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் ஜெயலலிதாவின் கார் மெதுவாக சென்றது. அப்போது பலர் ஆர்வ மிகுதியால் ஜெயலலிதா காரை நோக்கி ஓடினர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து திருப்பி அனுப்பினர். வழியில் நின்ற தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து ஜெயலலிதா சிரித்தபடியே பயணித்தார். ஜெயலலிதாவின் வருகையையொட்டி, விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டிருந்தனர்.
ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு சிலர் பன்னீர் ஊற்றியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
வரவேற்பு துளிகள்...
# வழிநெடுக பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், ஜெயலலிதா கார் வந்தபோது அவருக்கு சல்யூட் அடித்தனர்.
# ஜெயலலிதா வரும் வழியில் சாலையின் இருபுறமும் தேங்கியிருந்த மழை நீரை மாநகராட்சி பொறியாளர்களே நேரில் பார்வையிட்டு, மழை நீர் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
# போலீஸார் வாகனங்களை வேறு வழியாக திருப்பி அனுப்பினர்.
# ஜெயலலிதா கரும் பச்சையும், நீலநிறமும் கலந்த புடவை அணிந்திருந்தார். சாலையின் இருபுறமும் கூடி நின்ற தொண்டர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே இரட்டை விரலைக் காட்டியபடி வந்தார்.
# அமைச்சர்கள் சிலர் சிவப்பு நிற சுழல் விளக்கு பொருத்தப்பட்ட சைரன் ஒலி எழுப்பும் காரில் ஜெயலலிதாவின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர்.
# ஜெயலலிதா தனது வீட்டுக்குள் சென்ற பிறகு, தொண்டர்கள் ‘ஹேப்பி தீபாவளி’ என்று கோஷமிட்டு, ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொண்டனர்.
# போயஸ் தோட்டத்துக்குள் ஜெயலலிதா நுழைந்ததும் பெண்கள் பூசணிக்காய் சுற்றியும், ஆரத்தி எடுத்தும், தேங்காய் சுற்றி உடைத்தும் திருஷ்டி கழித்தனர்.