

தீபாவளிப் பண்டிகையையொட்டி அன்று ஒருநாள் மட்டும் மது விற்பனை ரூ.125 கோடியை எட்டியுள்ளது. மது விற்பனையில் சென்னை மண்டலம் இந்த ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத் தாண்டு ஆகிய பண்டிகை நாட் களில் தமிழகத்தில் மது விற்பனை பல மடங்கு அதிகமாக இருக்கும். இதை வைத்து, விடுமுறை நாளில் மது விற்பனைக்கு டாஸ்மாக் உயரதிகாரிகள் இலக்கு நிர்ணயிப்பார்கள். ஆனால், தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக்கின் 33 மாவட்டங் களை உள்ளடக்கிய ஐந்து மண்டலங்களில், தீபாவளி நாளில் மட்டும் சுமார் ரூ.125 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சுமார் 65 ஆயிரம் பெட்டி பீர், 1.90 லட்சம் பெட்டி இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத் தக்கது.
இதுகுறித்து டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் உள்ள சுமார் 6,800 மதுக்கடைகளிலும், உயர் ரக மது விற்கப்படும் எலைட் மது விற்பனை நிலையத்திலும் சேர்த்து தீபாவளியன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.125 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்ததால், ரூ.300 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை இருந்தது. இந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால், விற்பனை குறைந்துள்ளது’’ என்றனர்.
சென்னையில் உள்ள பெரிய வணிக மையங்களான ரெமீ மால், அல்சா மால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், கோயம்பேடு 10 ஸ்கொயர் மால் உள்ளிட்டவற்றில் செயல்படும் ‘எலைட்’ மதுபானக் கடைகள் மூலம் சுமார் ரூ.40 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. இடைவிடாத மழை காரணமாகவும், மதுவின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் விற்பனை மந்தம்:
மது விற்பனையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கோவை மண்டலம், இம்முறை 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திருச்சி மண்டலம் சுமார் ரூ.38 கோடிக்கு மது விற்பனை செய்து முதலிடத்திலும் மதுரை மண்டலம் 2-ம் இடத்திலும் (ரூ.34 கோடி) உள்ளன. சென்னை, சேலம் உள்ளிட்ட மண்டலங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளன. இதுகு றித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் வசிக்கும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் விற்பனை மந்தமாகி விட்டது’’ என்றனர்.
இந்த ஆண்டு மது விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், விற்பனை அதிகரிக்காததால் எதிர் பார்த்தபடி வருவாயை உயர்த்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மது விற்பனை குறைந்த தற்கான காரணம் குறித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொது மேலாளர் (சில்லரை விற்பனை) மற்றும் தலைமைப் பொது மேலாளர் (நிதி) ஆகியோர் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளை அழைத்து அவசரக் கூட்டம் நடத்தினர். போலி மது அல்லது கலப்பட மது விற்கப்பட் டதா என்பதை கண்டறிய ரகசிய விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரி வித்தன.