சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசைக் கண்டித்து தீர்மானமா?

சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசைக் கண்டித்து தீர்மானமா?
Updated on
2 min read

மழைக்காலக் கூட்டத் தொடர் முடிந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், தமிழக சட்டப் பேரவைக் கூட்டம், இன்று மாலை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. பேரவையின் தீர்மானத்துக்கு எதிராக காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு ஜனவரி மாதத்தில்தான் பேரவை மீண்டும் கூடும். அதன்படி, ஆளுநர் உரையாற்றுவதற்காக ஜனவரி மூன்றாவது வாரத்தில் தான் பேரவை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை அவசரமாக கூடும் என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் 12-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் முடிந்த மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது நாளில், 'இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவுக்குக்கூட இந்தியா பங்கேற்காமல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வெளி யுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்றும் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மட்டுமின்றி இந்தியா தரப்பில் ஒருவர்கூட பங்கேற்கக் கூடாது என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றிய நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்ப முடிவு செய்திருப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத் துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், சட்டப்பேரவை யின் அவசரக் கூட்டம் இன்று மாலை கூட்டப்பட்டுள்ளது. இதில், பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப தைக் கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்படும் எனத் தெரிகிறது. அவசரக் கூட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தகவல் தரப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. முக்கியமான பிரச்சினைக் காக அவசரக் கூட்டம் கூட்டப் படுவதால் இதில் திமுக, தேமுதிக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவையின் ஒருநாள் அவசரக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in