Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

விபத்தில் சிக்கிய விருத்தாசலம் எஸ்.ஐ. மரணம்

போலீஸ் வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் கடலூர் மாவட்ட போலீஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை போலீஸார் வழங்கினர்.

கடந்த டிசம்பர் 22-ம் தேதி மோட்டார் சைக்கிள் திருடியதாக விருத்தாசலத்தைச் சேர்ந்த

சதாம் உசைன், அஜீஸ், சையது அப்பாஸ் மற்றும் மற்றொரு சதாம் உசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், அந்தக் குற்றவாளிகளை கடலூர் சிறையில் அடைக்க, விருத்தாசலம் போலீஸார் அழைத்துச்சென்றபோது தெற்குவெள்ளூர் அருகே மீன் பாரம் ஏற்றிக்கொண்டு கேரளா சென்ற சரக்கு வாகனம், போலீஸார் வாகனம் மீது மோதியது.

இதில் எஸ்.ஐ கோபி (34) உள்ளிட்ட 6 காவலர்கள் மற்றும் 4 கைதிகள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். மேல்சிகிச்சைக்காக எஸ்.ஐ கோபி ஜிப்மர் மருத்துவ மனையிலும் பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு நிதிவசதியின்மைக் காரணமாக சேலம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ கோபிக்கு, ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும் கோபியின் குடும் பத்துக்கு அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தையும் வழங்கியு ள்ளனர். கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா, அரசின் நிவாரணம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில் சரக்கு வாகன ஓட்டுநர் மீது விபத்து வழக்குப் பதிவு செய்திருந்த ஊமங்கலம் போலீஸார், எஸ்ஐ இறந்ததையடுத்து, கொலை வழக்காக மாற்றி, ஓட்டுநர் சரவணனை கைது செய்தனர்.

தினந்தோறும் மத்தி மீன்களை ஏற்றிக்கொண்டு, கடலூரில் மாலை 6 மணிக்கு புறப்படும் வாகனங்கள் மறுநாள் காலை 4 மணிக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற இலக்கோடு வண்டியை ஓட்டுகின்றனர். இதனால் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் வாகனங்கள் இயக்குவதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x