வைகோவின் 19 மாத சிறைவாசம்: பொடா வழக்கில் 12 ஆண்டு பயணம்

வைகோவின் 19 மாத சிறைவாசம்: பொடா வழக்கில் 12 ஆண்டு பயணம்
Updated on
2 min read

மதுரை திருமங்கலத்தில் 2002-ம் ஆண்டு ஜூன் 29-ல் மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகளின் மீதான நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் கேள்விக்கு பதில் அளித்து பேசியது குறித்து விளக்கினார்.

அப்போது, ‘விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’ என்றார். கூட்டம் முடிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் தன் மகளை பார்க்கச் சென்றார் வைகோ.

அந்தநேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத் துக்கு ஆதரவாக பேசியதாக வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் மீது ‘பொடா’ சட்டத்தின்கீழ் க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜூலை 11-ம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பிய வைகோவை, சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீஸார் கைது செய்தனர். அவரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது 2002 டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதி 2 முறை வேலூர் சிறைக்கு சென்று வைகோவை சந்தித்தார்.

இதற்கிடையே, வைகோவுடன் கைதான மற்ற 8 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து 2004-ல் ஜாமீனில் விடுதலையாயினர். ஆனால், ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று வைகோ உறுதியாக இருந்தார். பின்னர், கருணாநிதி உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

சுமார் 19 மாத சிறை வாசத்துக்குப் பிறகு 2004 பிப்ரவரி 7-ம் தேதி வைகோ விடுதலையானார். வேலூர் சிறை வாயிலில் இருந்து அவரை தாரை, தப்பட்டை முழங்க சுமார் 8 மணி நேரம் மதிமுகவினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர். சிறையிலிருந்தபோது, சுமார் 47 ஆயிரம் கி.மீ. தூரம் பல நீதிமன்றங்களுக்கு போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டதாக வைகோ கூறினார்.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு செல்ல, 2004-ம் ஆண்டு ஜூனில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி பெற்றார். அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், பொடா மறுசீராய்வுக் குழு தீவிர பரிசீலனை செய்து, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, 2004 ஆகஸ்டில் வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரஇளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் இறந்துவிட்டனர்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலையில் வைகோ மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுரையின்பேரில் வைகோ உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், மதிவாணன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச், வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கை ரத்து செய்து கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்தது. இதன்மூலம் வைகோ மீதான சுமார் 12 ஆண்டு கால வழக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in