

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகை மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்களை எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்தன. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கனிமங்கள் எடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில், கடந்த 2 மாதங்களில் கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறு செல்லும் கிராம பகுதிகள், திருக்கண்டலம், ஆரிக்கம்பேடு, சோழவரம், காரனோடை, காட்டாவூர், பூதூர், புழல், ஏலியம்பேடு, தும்பாக்கம், சித்துக்காடு, ஆரம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளில் வருவாய் துறையினர், கனிமவளத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
இதில் உரிய அனுமதியின்றி மணல், சவுடு மண் மற்றும் கிராவல் மண் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற குற்றத்துக்காக 177 வாகனங்கள் மற்றும் 42 மாட்டு வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து அபராத தொகையாக சுமார் ரூ.29 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து கனிமங்கள் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மணல், சவுடு மண் மற்றும் கிராவல் மண் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற குற்றத்துக்காக 177 வாகனங்கள் மற்றும் 42 மாட்டு வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.