

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனம், தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புகளை கட்டியது. இவற்றில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரை மட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பலரைக் கைது செய்தனர்.
அதையடுத்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்தில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சிருஷ்டி கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மவுலி வாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள 11 மாடி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. கட்டிட இடிப்புப் பணி திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் படி, அந்த நிறுவனம் மவுலி வாக்கம் 11மாடி கட்டிடத்தை வெடிபொருட்களைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கத் திட்ட மிட்டது. அது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.)அதிகாரிகள், தாம்பரம் கோட்டாட்சியர் ஆகி யோரிடம் அந்த நிறுவன நிர்வாகி பொன்லிங்கம் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கட்டிடத்தை வெடிபொருட்களைக் கொண்டு இடிக்கும்போது அங்கு உள்ள பொருட்களை அப்புறப்படுத்துவது, கட்டிடத்தின் சுமையைக் குறைப்பது வழக்கம். அதன்படி மவுலிவாக்கம் கட்டிடத்தில் உள்ள ஹாலோபிளாக், கல், மணல், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டு மானப் பொருட்களும், கட்டுமான உபகரணங்களும் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன.
கட்டிட இடிப்புக்கான பணிகள் ஏறக்குறைய தொடங்கிவிட்ட நிலையில், கட்டிடத்தின் நான்கு புறமும் போலீஸ் பாதுகாப்பு வளை யத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.
கட்டிட இடிப்பு குறித்து அங்கே பணிபுரியும் ஒருவர் கூறும்போது, "கட்டிடத்தின் உயரம், உறுதித் தன்மை ஆகியவற்றைக் கணக் கிட்டு, போதிய அளவு வெடி பொருட்களைப் பொருத்தி நவீன தொழில்நுட்பத்தில் ரிமோட் மூலம் 10 விநாடிகளில் இடித்து தரைமட்டமாக்கப்படும். இப் பணியை முடிக்க 30 நாட்கள் வரை ஆகும். இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை தாங்கி நிற்கும் நடுப் பகுதியில் உள்ள மிகப்பெரிய தூண் அருகே வெடிமருந்துகளை வைத்து கட்டிடத்தை வெடிக்கச் செய்வார்கள். அவ்வாறு செய்யும் போது கட்டிடம் உள்பக்கமாக விழுந்து தரைமட்டமாகும்" என்றார்.
இந்தக் கட்டிடத்தை இடிப்பதற் காக ஒப்பந்தம் செய்துள்ள திருப்பூர் தனியார் நிறுவன நிர்வாகி பொன்லிங்கம் கூறும்போது, "கட்டிடத்தைச் சுத்தம் செய்யும் பணி மட்டுமே இப்போது நடக் கிறது. இந்த கட்டிட இடிப்புப் பணி யைப் பொறுத்தவரை எங் களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றமும் வழிகாட்டுதல் களை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஏதாவது தவறான தகவல்கள் வெளிவந்தால் அது அப்பகுதியில் இருக்கும் மக்களைப் பீதியடையச் செய்யும் அதனால் கட்டிட இடிப்புப் பணிக்கான முன்னேற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே தகவல் தெரிவிக்க முடியும்" என்றார்.