Published : 21 Aug 2014 07:44 PM
Last Updated : 21 Aug 2014 07:44 PM

நீதிக்கு தலை வணங்குமா அதிமுக அரசு?- கருணாநிதி கேள்வி

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, மனிதாபிமானத்தோடு அ.தி.மு.க. அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கடித வடிவில் வெளியிட்ட அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன், வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் 2-7-1990 அன்று நியமனம் செய்யப்பட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, 1991-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அனைத்து மக்கள் நலப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்து வெளியேற்றினார்கள்.

1996-ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி, என்னுடைய தலைமையில் அமைந்தபோது, வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனைத்து மக்கள் நலப் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு 31.5.2001 அன்று மீண்டும் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

2006-ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி என் தலைமையில் ஐந்தாவது முறை அமைந்தபோது, 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவர்கள் ஏற்கனவே செய்ததைப்போல, மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து தமிழக அ.தி.மு.க. அரசு, 8-11-2011 அன்று அரசாணை பிறப்பித்தது.

பணி நீக்க உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு அந்தச் சங்கத்தின் அலுவலர்கள் சார்பில் தொடரப்பட்டது. இதற்கான வழக்கில் நீதியரசர் சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை; மக்கள் நலப் பணியாளர்களை பணியில் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக அவர்களை பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை 23-11-2011 அன்று தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.

மக்கள் நலப் பணியாளர் சங்கத் தேர்தல் 3-4-2012 அன்று நடத்தப்பட்டு, மதிவாணன் தலைவராகவும், ராஜேந்திரன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் சார்பில் எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றாலும், சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டித்தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே இருந்த பழனி என்பவர் நீக்கப்பட்டிருந்த நேரத்தில், அவர் யாருடனும் கலந்து கொள்ளாமல், அவர் மட்டும் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்து கொண்டு, ஐந்து மாதச் சம்பளம் கொடுத்தால் போதும், பணியிலிருந்து நீக்குவதற்கு ஒப்புக் கொள்வதாக ஒரு உடன்பாட்டினைச் செய்து கொண்டு, நீதிமன்றத்திலும் அதனைத் தெரிவித்து விட்டனர். நீதிமன்றமும் அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டு, மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஆணைக்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிட்டது.

அதற்குப் பிறகுதான் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன், "பழனி என்பவர் பொறுப்பிலேயே இல்லை, மதிவாணன்தான் பொறுப்பிலே இருக்கிறார், எனவே பழனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டு"மென்று நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார்.

நீதியரசர் சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், "மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்கு கருதினாலும் கூட கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்துக் கேட்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவைச் சரியாக பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர்களின் நிலையை பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசு மாறும்போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக்குரியது, வேதனையானது, வருந்தத்தக்கது. எனவே அரசு கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்தத் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்; அதை விட்டு விட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது? இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினார்கள்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் 29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, “தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? ஆட்சி மாறும்போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்? இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது" என்று கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 11-11-2013 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அணில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து அளித்த தீர்ப்பில், மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அனைத்து அம்சங்களையும் தகுதி அடிப்படையில் கணக்கிலே எடுத்துக் கொண்டு, வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரக்கூடாது. பொறுப்பில்லாத ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை அரசு பாழடித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இருபது வருடம் அரசுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்கள்.

நீதியரசர்கள், "தமிழகத்திலே என்ன நடக்கிறது?" என்றும், "மக்கள் நலப் பணியாளர்களை பந்துபோல் விளையாடுவது சரிதானா?" என்றும் கேட்டிருக்கிறார்களே, அது இந்த அரசுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, தி.மு. கழக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கிடைத்தது என்ற ஒரே காரணத்திற்காக அரசு வீம்பு காட்டுவது நல்லதுதானா? அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வாறு பணி நியமனம் பெற்றவர்கள் யாரையாவது தி.மு. கழக ஆட்சியிலே வீட்டிற்கு அனுப்பிய சம்பவம் நடைபெற்றது உண்டா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் நான் கருத்துத் தெரிவிக்கும் போது, "நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். இனியாவது அ.தி.மு.க. அரசு தெளிவுபெற வேண்டும். யாரையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கிலே உச்ச நீதிமன்றம் இன்னும் ஆறு மாதங்களில் உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பு அளித்திருந்த போதிலும், அந்த விசாரணை நடைபெறும் வரை காத்திருக் காமல், தமிழக அரசே முன்வந்து, வழக்கினைத் திரும்பப் பெற்று, அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் உடனடியாக மீண்டும் வேலை அளித்திட, முன்வர வேண்டும். 'ஆறுவது சினம்' என்பது பழமொழி. ஆறிவிடாமல் சினத்தை அப்படியே வைத்திருப்பது, அதலபாதாளத்திற்கே இட்டுச் சென்றுவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் கோபத்தைத் தணித்துக் கொண்டு, அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிட அரசே முன் வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால் ஜெயலலிதா அப்படியெல்லாம் கேட்டு விடுவாரா என்ன? உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கை மீண்டும் விசாரித்து வந்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்கள் நலப் பணியாளர்கள் கழக ஆட்சியில் எவ்வாறு விதிமுறைப்படி, தேர்வுக் குழு அமைத்து, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு அ.தி.மு.க. ஆட்சியில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதையும் எடுத்து விளக்கினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணா ஆகியோர் 19-8-2014 அன்று நல்லதோர் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில் முக்கியமாக, "பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அதே பெயரிலேயோ அல்லது வேறு எந்தப் பெயரிலேயோ, மது ஒழிப்புப் பிரச்சாரப் பணிக்காகவோ அல்லது அரசுப் பள்ளிகள், கிராமப் பஞ்சாயத்து, நகர மன்றங்கள், மாநகராட்சிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களிலே பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போது அவர்களுடைய உச்ச வயது வரம்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்கவேண்டும். அவர்களுடைய சொந்த நகரங்களிலேயோ அல்லது மாவட்டங்களிலேயோ மேற்காணும் அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப் பட்டு, 31-10-2014க்குள் முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை அன்றைய தேதிக்குள் அவர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றால், பணி அமர்த்தப்படாத மக்கள் நலப் பணியாளர்களுக்கு 1-11-2014 ஆம் தேதி முதல் அவர்கள் இறுதியாக வாங்கிய மாதச் சம்பளத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழக அரசு மது விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வருவாயை, சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பணியிலே அமர்த்திப் பெறுகின்ற நிலையில், அந்தக் குடியினால் ஏற்படுகின்ற தீமைகளை விளக்கிடும் வகையில் மது ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு இந்த மக்கள் நலப் பணியாளர்களை பணியிலே அமர்த்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தை சுகாதாரத் திட்டம், ஊரகத் தூய்மைத் திட்டம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இவர்களை பணியிலே அமர்த்தலாம்" என்றெல்லாம் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகின்றன. மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி தராமல் இந்த மூன்றரை ஆண்டுகளையும் அ.தி.மு.க. அரசு வீணடித்ததோடு, உச்ச நீதிமன்றம் வரை அவர்களை இழுத்தடித்து படாத பாடு படுத்தியிருக்கிறது. நீதியரசர்கள் எல்லாம் தங்களது கடுமையான கண்டனத்தை இந்த அரசுக்குத் தெரிவித்ததோடு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி கொடுக்கப்பட வேண்டுமென்று உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் பிறகும் அ.தி.மு.க. அரசு மேலும் கால தாமதம் செய்யாமல், பணி வாய்ப்பினை இழந்ததால் 19 மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள் என்ற சோக நிகழ்வினையும், வேலையிழந்து தவிக்கும் மக்கள் நலப் பணியாளர்களில் மிகப் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நினைவிலே கொண்டாவது, உடனடியாக அவர்களுக்கு வேலை தர முன்வர வேண்டும். அதற்கு இடம் அளிக்காமல், தி.மு. கழக ஆட்சியில் பணி நியமனம் பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இந்தத் தீர்ப்பையும் மதிக்காமல், கால தாமதம் செய்ய வேண்டு மென்ற நோக்கத்தோடு, இதற்குப் பிறகும் மேல் முறையீடு செய்ய முற்பட்டால், அதைவிடப் பெரிய கொடுமையோ, அநீதியோ வேறு எதுவும் இருக்க முடியாது. பொதுவாகவே அ.தி.மு.க. அரசுக்கு அரசு அலுவலர்களிடம் எந்த அளவுக்கு நல்ல பெயர் (?) உண்டு என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

எனவே இதற்குப் பிறகாவது அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது! நாட்டிற்கும் நல்லது! பொதுவாக அ.தி.மு.க. அரசு நியாயத்தையும் மதிப்பதில்லை; நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிப்பதில்லை! அந்த முறையையே இப்போதும் பின்பற்றாமல் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புக்குத் தலை வணங்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முன்வருவார்களா?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x