

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நேற்று கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணிகள் நடை பெற்றன. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பெருகி வரும் மக்கள் தொகையை நிலைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா வில் மக்கள் தொகை 121 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தில் உலகில் இந்தியா 2-ம் இடத்தில் இருக்கிறது. தற்போதுள்ள நிலையே நீடித்தால் 2028ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி நமது இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும். எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மக்கள் தொகையை நிலைப் படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடை பெற்றது.
பாரதிதாசன் திடலில் தொடங்கிய இப்பேரணி காந்தி திடலில் நிறைவடைந்தது. 10-க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர் பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். இதில் சிறப் பாக பேரணியில் வலம் வந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட் டிருந்தது.
பின்னர் நடந்த நிறைவு விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தனராக தேசிய ஊரக சுகாதார திட்ட இயக்குநர் காளி முத்து கலந்து கொண்டு பேரணி போட்டியில் வெற்றி பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதில் முதல் பரிசை ஏ.ஜி. பத்மாவதி செவிலியர் கல்லுாரி, இரண்டாம் பரிசை இந்திராணி செவிலியர் கல்லுாரி, மூன்றாம் பரிசை கோரிமேடு அன்னை தெரேசா ஆராய்ச்சி நிறுவனமும் வென்றன.
கடலூர்
கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மக்கள் தொகை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.
கடலூர் அரசு தலைமை மருத்து வமனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை நேற்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) விஜயா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில் அரசு செவி லியர் பயிற்சி பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரி , செயின்ட் ஜோசப் மேல் நிலைப் பள்ளி மற்றும் கந்த சாமி நாயுடுகலைக் கல்லூரியை சார்ந்த மாணவ,மாணவிகள், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.
மருத்துவமனை வளாகத்தில் குடும்பநல கண்காட்சி அரங்கம் நிறுவப்பட்டு அதில் நிரந்தர மற்றும் தற்காலிக கருத்தடை சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது, துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் சாய் லீலா, இருக்கை மருத்துவர் சண்முகக்கனி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சண்முகம், மாவட்ட மக்கள் கல்வி தகவல்தொடர்பு அலுவலர் தியாகராஜன், கடலூர் துறைமுக அரிமா சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.