

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகிவிட்டன. பேரிழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி யும் ஒன்று. கடந்த 20 ஆண்டு களுக்கு முன்வரை 50 தென்னை மரங்கள் இருந்தால் வாழ்க்கை நடைமுறை வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது பராமரிப்பு செலவு, தேங்காய் வெட்டும் கூலி, நோய் தாக்குதல் ஆகியவற்றால் தேங்காயில் நஷ்டக்கணக்கே மிஞ்சி நிற்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகள் வேதனை
கோடையைப்போன்று வெயில் கொளுத்துவதால், தற்போது தேங்காய் மகசூல் மிகவும் குறைந்துவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் காய்ந்து பயனற்றுபோய்விட்டன. மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தேங்காய் விளைச்சல் குறைவால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் கொள்முதல் விலையே ரூ.25 முதல் 30 வரை உள்ளது.
இழப்பீடு தேவை
ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கரன் கூறும்போது, “கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை கன்னியாகுமரி மாவட்டம் தற்போது சந்தித்திருக்கிறது. தென்னை மரங்கள் கருகி வருகின்றன. வறட்சி நிவாரணம் வழங்கும் பயிர்களின் பட்டியலில் தென்னை இடம்பெறாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.தென்னை விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்கவேண்டும். கருகிய தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார் அவர்.
சவாலான தருணம்
வேளாண் துறையினர் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்ணீரின்றி அனைத்து விவசாய பயிர்களுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தென்னை மரங்கள் இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் கருகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத் துறைக்கு இது சவாலான தருணம். தென்னை மரங்கள் சேதம் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான உத்தரவு வந்ததும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றனர்.