

அதிக கட்டணம் வசூல் மற்றும் அதிகம் எடையுள்ள பொருட்களை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் திரும்பும்போது அதிக கட்டணம் வசூல், அதிக எடை ஏற்றி செல்லுதல், பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் உள்ளிட்டவற்றை ஆம்னி பஸ்கள் செய்கின்றன.
அத்தகைய பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மொத்தம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10-ம் தேதி இரவு 8 மணி அளவில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈ.சி.ஆர், ஒ.எம்.ஆர் ஆகிய இடங்களில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், 26 ஆம்னி பஸ்களில் பயணிகளின் பொருட்களை தவிர்த்து, மற்ற பொருட்களையும் அதிகமாக எடையில் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2 ஆம்னி பஸ்கள் அதிகம் கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
எனவே, மொத்தம் 28 பஸ்களுக்கும் பர்மிட்டை ஏன் ரத்து செய்ய கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களில் விளக்கம் தராவிட்டால் போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.