

`தமிழ்நாடு கள் இயக்கம்’ தலைவர் நல்லசாமி கள் இறக்குவதற்கு அனுமதி கேட்டு போராட்டங்களை நடத்திக் களைத்தவர். கள்ளுக்கு அனுமதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்றெல்லாம் கடந்த தேர்தல்களில் பிரகடனம் செய்து பார்த்தார். யாரும் இவரது கோரிக்கைக்கு செவிமடுப்பதாய் இல்லை. அதனால் இப்போது, ‘விவசாய சங்கமே தேர்தலில் போட்டியிடும்’ என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருக்கும் நல்லசாமி சனிக்கிழமை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ’’விவசாயத்துக்கான இடுபொருள்கள், உபகரணங்கள் விலையேற்றம் உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய - மாநில அரசுகள் இவற்றை எல்லாம் சீர் செய்யத் தவறிவிட்டன.
விவசாயிகளை நிரந்தர கடனாளியாகவே வைத்திருந்து, தேர்தல் நேரத் தில் கடன் தள்ளுபடி என்ற வித்தையில் ஈடுபடுகின்றனர். தொழில்மயத்துக்கு தரப்படும் ஆதரவு உணவளிக்கும் விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தரப்படுவதில்லை. சாமான்யர்களின் சிந்தனையும், செயலும் இந்த நாட்டை வழிநடத்தவேண்டும். அரசியல் அதிகாரத்தை நல்வழிப்படுத்த, தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாதது .
மாற்று எரிபொருள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தெளிவான வாக்குறுதிகளை முக்கியக் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் தராவிட்டால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் விவசாய சங்கத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்’’ என்று சொன்னார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணங்களை விளக்கி 7 அமைப்புகள் சேர்ந்து துண்டுப் பிரசுரங்களையும் கடந்த 18-ம் தேதி யிலிருந்து கரூர் பகுதியில் விநியோகித்து வருகின்றன. இதனிடையே, மாற்றத்தை உருவாக்கும் விவசாயிகள் சங்கம் சார்பாக கரூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தப் போவதாகவும் பிரகடனம் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து நல்லசாமியிடம் கேட்டதற்கு, ’’அப்படி போட்டியிட்டால் அவர்களை நாங்கள் ஆதரிப்போம்’’ என்றார்.