Last Updated : 06 Feb, 2017 02:44 PM

 

Published : 06 Feb 2017 02:44 PM
Last Updated : 06 Feb 2017 02:44 PM

நாட்டுக்கோழி தோற்றத்தில் அசில் கோழி முட்டைகள்: வித்தியாசம் அறிய மக்களிடம் விழிப்புணர்வு இல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு சந்தைகளில் உள்ள முட்டை கடைகளில் நாட்டுக்கோழி முட்டை ரூ.10 என்ற அறிவிப்பு பலகைகள் தொங்குகின்றன. இந்த கடைகளில் பழுப்புநிற ஓடு இருக்கும் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகள் என்று சொல்லி விற்கின்றனர். ஆனால், அவை அசல்தானா என்பதை கண்டறிய, போதிய விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, கால்நடைத்துறை, தோட்டக் கலைத்துறை சார்பில், விளை பொருட்கள், கால்நடைகளுக்கான தீவனங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

விவசாயிகள் அதிர்ச்சி

இதில், கால்நடைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழிகள், குஞ்சுகள், பழுப்புநிற ஓடுடன் கூடிய முட்டைகள் இருந்தன. இவற்றைப் பார்வை யிட்ட விவசாயிகள் , `நாட்டுக்கோழி முட்டை தானே?’ என்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள், அவை `அசில்’ கோழி முட்டைகள் என்றும், ஒரு முட்டை ரூ.4.50-க்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர். மேலும் அங்கு வைத்திருந்த கோழிகளும் `அசில்’ வகை கோழிகள் எனக் கூறினர்.

பழுப்புநிற ஓடுடன் கூடிய இந்த முட்டைகளைத்தான் சந்தைகளில் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி தலா ரூ.10 அல்லது ரூ.12-க்கு விற்பனை செய்கின்றனர். பல இறைச்சிக் கடைகளிலும் இவற்றையே நாட்டுக்கோழிகள் என்று கூறி விற்பனை செய்கின்றனர். இதை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

`அசில்’ கோழி வகைகள், கலப்பின நாட்டுக்கோழி இனம்தான் என்றும், நாட்டுக்கோழி முட்டையிலுள்ள அனைத்து சத்துக்களும் இவற்றிலும் இருக்கும் என்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

‘நாட்டுக்கோழி முட்டைகளுக்கு தேவை அதிகமிருப்பதால், சந்தை களில் கலப்பின நாட்டுக்கோழி முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இரு வித கோழிகளின் முட்டைகளும் பழுப்பு நிற ஓடுடன் காணப்படும். இதனால், எளிதில் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியது.

கோழி முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள், முட்டை உற்பத்தியாளர்கள்தான் இவற்றை வகை பிரித்து, மக்களுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

தற்போது, கலப்பின நாட்டுக்கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதால் முட்டை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால், விலையை குறைத்து விற்பனை செய்ய முடியும். இந்த விவகாரத்தில் நுகர்வோரும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

வீரிய ரக கலப்பினம்

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மூலம், நாட்டுக்கோழிகளில் வீரிய ரக கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகத்திலிருந்து கிரிராஜா, ஆந்திரத்திலிருந்து சொர்ணதாரா, கேரளத்திலிருந்து கிராமப்பிரியா வகை கோழிகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் அசில், காவேரி, நந்தனம் கோழி- 1, நாமக்கல் கோழி- 1 என்று வீரிய ரக நாட்டுக்கோழி இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அரசுத்துறைகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x