

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப் படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவ தற்கு, தவறான புரிதல்களால் சம்பந்தப் பட்டவர்கள் விண்ணப்பிக்காமல் உள்ள னர். இதனால், மத்திய சிறைகளில் கோடிக் கணக்கில் நிதி தேக்கமடைந்து உள்ளதாக தெரிகிறது.
கொலை, மோதலின்போது உடல் பாகங்கள் இழப்பு போன்ற வாழ்வை சிதைக்கக்கூடிய குற்றச் சம்பவங்களால் ஆண்டுதோறும் பல் வேறு குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக, ‘குற்றம் பாதிப்படைந்தவர் இழப்பீடு மன்றங்களின் தேசிய சங்கம்’ குற்றங் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதாவது, கொலைக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளி அடைக்கப் பட்டுள்ள சிறைக்குச் சென்று பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது, பரிசீலனைக்குப் பின்னர், அந்த விண் ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்து மாநில அரசுக்கு சிறை நிர்வாகங்கள் அனுப்பி வைக்கும். அதன்பேரில், மாநில அரசு முடிவு எடுத்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான அனுமதியை வழங்குகிறது.
தமிழகத்தில் இந்த நிதியை விண் ணப்பித்துப் பெறுவதற்கு பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலானோர் முன் வராததால், சுமார் ரூ.4 கோடி அளவுக்கு நிதி முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படு கிறது. இதற்கு, பொதுமக்களின் அறி யாமையும், அவர்களின் தவறான புரிதலுமே முக்கியக் காரணம் என சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் கூறியதாவது:
கோவை மத்திய சிறையைப் பொறுத்தவரை, குற்றங்களால் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் இழப்பீட்டு நிதி மட்டும் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு தேங்கிக் கிடக் கிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட வர்கள் தவறான புரிதல்களால் விண்ணப்பிக்காமல் இருப்பதே இதற் குக் காரணம்.
அதாவது, குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறை யில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் களுக்கு சிறையில் பல்வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, சிறைவாசிகளின் மொத்த ஊதியத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு ஒரு நிதியாக உருவாக்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
ஒரு குடும்பம் தனது குடும்ப உறுப்பினரை கொலைக் குற்றத்தால் இழந்து தவிக்கும்பட்சத்தில், அவர் களுக்கு ரூ.50 ஆயிரம் அளவுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதுவே, அந்த குடும்பத்தில் கல்வி கற்கும் குழந்தைகள் இருந்தால் கூடுதலாக ரூ.10 ஆயிரம் அளவுக்கு வழங்கப்படும். இதேபோல், மோதலின் போது கை, கால்கள், உடல் பாகங் களை இழப்பவர்களுக்கும் அதற்குத் தகுந்தாற்போல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அரசால் வழங்கப்படும் நிதி
ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங் கள் என்ன நினைக்கின்றன என்றால், தங்களது குடும்ப உறவை, கொலை செய்தவர் சிறையில் சம்பாதித்த பணத்தில் இருந்து இழப்பீட்டைத் தாங்கள் பெறுவதா என தவறான புரிதலுடன் உள்ளனர். அதனால், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை யைக்கூட பெறாமல் தவிர்க்கிறார்கள். இந்த நிதி, அவர்கள் நினைப்பதுபோல் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் இருந்து பெறுவது கிடையாது. இது அரசால் வழங்கப்படும் இழப்பீடு. பொதுமக்கள் இந்த நிதி குறித்த தவறான புரிதலை களைய வேண்டும். தமிழக அளவில் இதற்கான நிதி மட்டும் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு முடங்கிக் கிடக்கிறது என்றார்.