

அகோரி பூஜை செய்வதற்காக, சென்னையில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் சடலத்தை, பெரம்பலூரைச் சேர்ந்த மந்திரவாதி ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சட லத்தை விற்பனை செய்த மயான ஊழியர்களில் இருவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த வீட்டில், போலீஸார் சோதனை நடத்தியதில், இறந்த பெண் சடலம் அழுகிய நிலையில் போர்வையால் சுற்றப்பட்டு ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், மாந்திரீக பூஜைகள் செய்யப்பட்டதற்கான தடயங்கள் அங்கு காணப்பட்டன.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த வீட்டில் தங்கியிருந்த கார்த்திக்(31) அவரது மனைவி நஷிமா என்கிற தீபிகா(27) உட்பட 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கார்த்திக், அந்த வீட்டில் தன் மனைவியுடன் வாடகைக்கு வசித்து வருவதும், பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பிரச்சினைகளைச் சரிசெய்வதாகக் கூறி பில்லி- சூனியம் செய்வது, இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களைப் பேச வைப்பது, பெண்கள் மற்றும் ஆண்களை வசியம் செய்வது உட்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பலரிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணை மேற் கொண்டதில், மாந்திரீக வேலைக் காக கார்த்திக்குக்கு இளம்பெண் ணின் சடலம் தேவைப்பட்டது. இதற்காக, சென்னை மயிலாப்பூரில் மயான ஊழியர்களான தனராஜ், மற்றொரு கார்த்திக், வினோத் ஆகியோரை அணுகியுள்ளார்.
அவர்கள் ரூ.20 ஆயிரத்துக்கு சடலத்தைத் தர சம்மதித்தனர். அதன்படி, கடந்த ஜன.18-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட, பிரேத பரிசோதனைக்குப்பின் புதைக்கப்பட்ட, சென்னை தேனாம் பேட்டை எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகள் அபிராமி (21) என்பவரின் சடலத்தை தோண்டி எடுத்து மந்திரவாதி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர்.
அந்த சடலத்தை பெரம்பலூரில் வசித்துவந்த தனது வீட்டில் வைத்து கார்த்திக், அகோரி பூஜை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் போலீஸார் மயிலாப்பூர் மயான ஊழியர்கள் தனராஜ், மற்றொரு கார்த்திக் ஆகிய இருவரைக் கைது செய்து மேலும் விசாரித்துவருகின்றனர். தலைமறைவான மயான ஊழியர் வினோத்தை தேடிவருகின்றனர்