தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகளே நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 4.09 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் நுழைவுத் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள மாணவர்களிடையே மருத்துவப் படிப்பில் சேர கடும்போட்டி நிலவும்.

தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை. இதனால் பெரும் குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்கும் வாய்ப்புள்ளது. இந்த நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப்படிப்பு இடங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தான். நுழைவுத் தேர்வை நடத்தி தரவரிசையை வெளியிடுவதால் மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மருத்துவ கல்வி வணிகத்தை தடுத்து விட முடியாது.

நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தும் அதிகாரம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், அந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையை புறந்தள்ளிவிட்டு பணவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் ஆபத்து உள்ளது. இது மருத்துவ பொது நுழைவுத்தேர்வின் நோக்கத்தை சிதைத்து விடும்.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுக்கும் வகையில் அவற்றின் மாணவர் சேர்க்கையையும் அம்மாநில அரசே ஒற்றைச்சாளர முறையில் நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே அணுகுமுறை தேவை என்பதற்காக நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்த மத்திய அரசு, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதித்து விட்டு, மற்ற மாநிலங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் அரசே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in