Last Updated : 14 Oct, 2014 07:03 PM

 

Published : 14 Oct 2014 07:03 PM
Last Updated : 14 Oct 2014 07:03 PM

கடந்த நூற்றாண்டில் வரலாறு காணாத கடல் நீர்மட்ட உயர்வு: புதிய ஆய்வில் தகவல்

கடந்த 6,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 6,000 ஆண்டுகால கடல் நீர்மட்ட வரலாற்றில் கடந்த நூற்றாண்டினைப் போல் கடல் நீர்மட்டம் அதிகரித்ததாக தெரியவில்லை என்று அவர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டு தொடங்கியது முதல் கடல் நீர்மட்டம் 20 செ.மீ. அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் துருவப் பனிமுகடுகள் உருகுதல் ஆகியவற்றால் இந்த அபாய நீர்மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

கடல் நீர்மட்ட ஆய்வு வரலாற்றுப் பதிவேடுகளின் படி 20 செ.மீ உயர்வு என்பது வழக்கத்திற்கு மாறானது.

இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், வட அமெரிக்கா, கீரீன்லாந்து, ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான படிவு மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு முந்தைய கடல் மட்டம் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடலில் நீர்மட்டம் அதிகரிப்பினால் கடல் அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளும் இதனை உறுதி செய்துள்ளன என்று இந்த ஆய்வுக்குழு தலைவர் கர்ட் லாம்பெக் கூறுகிறார். எனவே கடல் நீர்மட்டம் 20 செ.மீ. அளவு கடந்த நூற்றாண்டில் உயர்ந்துள்ளது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மை என்று அடித்துக் கூறுகிறார் அவர்.

கரியமில வாயு வெளியேற்றத்தை இப்போது வைத்திருக்கும் நிலையில் பராமரித்தால் கூட கடல் நீர்மட்ட அதிகரிப்பை இனி கட்டுப்படுத்த முடியாது, எந்த அளவு நீர்மட்டம் உயரும் என்று கூற முடியாது எனினும் இனி இந்த நிலையை மாற்றியமைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x