

கனிமொழி பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். சிஐடி காலனி வீட்டில் மரம் நடுவிழா, தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவது, மாலையில் கவியரங்கம் என்று கருணாநிதி பிறந்தநாள் பாணியிலேயே கனிமொழி பிறந்தநாளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதே நாளில், கோவையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது கனிமொழி ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கனிமொழிக்கு என தனிக்கூட்டம் சேர்வதை ஸ்டாலின் தரப்பினர் விரும்பவில்லை. கனிமொழி பிறந்தநாளன்று கோவையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கூட்டியிருக்கிறார்கள். அன்று மாலை பழனியில் பொதுக்கூட்டத்தில் பேசும் திமுக பொருளாளர் ஸ்டாலின், மறுநாள் திண்டுக்கல் சென்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். இதெல்லாம் கனிமொழி பிறந்தநாளுக்கு பெரிய அளவில் கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு செய்வதாகவே தெரிகிறது’’ என்கின்றனர் கனிமொழி ஆதரவாளர்கள்.
சென்னையில் பல இடங்களில் கனிமொழியை வாழ்த்தி பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ப்ளக்ஸ் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன. ‘‘பல இடங்களில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. ராமாவரத்தில் பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியிலும் ஸ்டாலின் ஆதரவாளர்களே இருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால், அவர்களை பொருட்படுத்த வேண்டாம் என்று கனிமொழி கூறிவிட்டார்’’ என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.