Published : 27 Feb 2014 09:52 PM
Last Updated : 27 Feb 2014 09:52 PM

தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

திருத்தணி தொகுதி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன் வியாழக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தேமுதிக அதிருப்தி வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றது.

பின்னர், 2012-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் பேசும்போது முதல்வருக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் கூட்டணி முடிவுக்கு வந்தது.

தேமுதிகவில் இருந்தும் விலகியதுடன், எம்.எல்.ஏ. பதவியையும் பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததால், தேமுதிகவின் அதிகாரப்பூர்வ பலம் 28 ஆகக் குறைந்தது.

இதனிடையே, தேமுதிக கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தங்கள் தொகுதி நலன் கருதி பார்க்கத் தொடங்கி, பிறகு அவர்கள் அதிருப்தி எம்.ஏ.க்கள் ஆகினர்.

அந்த வகையில், ஏற்கெனவே 7 அதிருப்தி எம்எல்ஏக்கள், முதல்வரைச் சந்தித்துவிட்டனர். இதனால், தேமுதிக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சட்டப்பேரவையில் 21 ஆக குறைந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தேமுதிக உறுப்பினர்களாக நீடித்தாலும் அவர்களுக்கு பேரவையில் தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில், தேமுதிகவைச் சேர்ந்த திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. எம்.அருண் சுப்பிரமணியன் சந்தித்தார். தனது தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக மனு ஒன்றினை அவர் அளித்ததாக அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்தச் சந்திப்பின் மூலம் சட்டப்பேரவையில் தேமுதிக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.

முன்னதாக, தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன் மீது அதிமுக சார்பில் நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி நிலை?

சட்டப்பேரவையில் உள்ள கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏ-க்கள், வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

அதன்படி, இன்னும் 2 தேமுதிக உறுப்பினர்கள், முதல்வரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்கள் அனைவரும் வேறு கட்சியினராக கருதப்படலாம்.

அத்தகையச் சூழல் வந்தால், தேமுதிகவின் பலம், 23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள திமுகவின் விட குறைந்துவிடும். அதைத் தொடர்ந்து பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றுவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x