பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை உயர்த்த அனுமதிக்கக் கூடாது: ஜி.கே.வாசன்
பாலாறு தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசின் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாலாறு தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கிடையே பாயும் நதி. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டவோ, தடுப்பணையின் உயரத்தை உயர்த்தவோ கூடாது. தற்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்துவதற்காக நடவடிக்கையை ஆந்திர அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் வட மாவட்டத்தில் வசிக்கின்ற விவசாயிகள் தங்களுடைய விவசாயத்திற்கும் அப்பகுதி மக்கள் தங்களின் குடிநீருக்கும் பாலாற்றின் தண்ணீரையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பாலாற்றில் தண்ணீர் குறைவாகவே இருக்கின்றது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதிய தண்ணீர் பாலாற்றில் இருந்து கிடைக்கப்பெறாமல் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 4.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாலாற்று நீரினால் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தும் பணியில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை ஈடுபட்டுள்ளது. இது ஆந்திர அரசின் அத்துமீறலை வெளிப்படுத்துகிறது. ஆந்திர அரசின் இந்த செயலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதனை உடனே தடுத்து நிறுத்தக் கூடிய நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய அரசு தமிழக விவசாயிகளின் நியாயத்தை உணர்ந்து ஆந்திர அரசின் இச்செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். எனவே, மத்திய அரசு தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்களின் தண்ணீர் தேவையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை உயர்த்த அனுமதிக்கக் கூடாது'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
