

பிரியங்கா காந்தி மீதான பாஜகவினர் விமர்சனத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் அரசியலை நிர்ணயிக்கிற உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளுகிற சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, வெற்றிப் பாதையில் செல்வதை சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினர் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பிரியங்கா காந்தியின் தீவிர பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார் இழிவான முறையில் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவில் பிரச்சாரத்திற்காக சினிமா நட்சத்திரங்களும், அழகான பெண்களும் அதிகமாக உள்ளதாக கூறி தமது சொந்த கட்சியைச் சேர்ந்த பெண்களையே கேவலப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ளார். பெண் இனத்தையே இழிவுபடுத்தும் இக்கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேகாலயா ஆளுநராக இருந்த பி. சண்முகநாதன் மீது அவரிடம் பணிபுரிந்த 98 ஊழியர்கள் அவரது பாலியல் பலாத்கார செயல்கள் குறித்து புகார் தெரிவித்ததன் அடிப்படையில் பதவியிழக்க வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. பெண்களை கேவலப்படுத்தி தனிமனித ஒழுக்கத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜகவினருக்கு மேகாலயா ஆளுநர் பதவியிழப்பு உரிய பாடமாக அமையும் என கருதுகிறேன்.
நாட்டு மக்கள் அனைவராலும் மனமுவந்து ஏற்றுக் கொள்கிற பிரியங்கா காந்தி மீதான பாஜகவினர் விமர்சனத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.