

ஊழல் புகார்களை விசாரிக்கும் அமைப்பான லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க மறுப்பது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோயலை ஆதரித்து, செல்வநாயகபுரம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் பேசியது:
"தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம். உப்பளத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். உப்புத் தொழில் நலிவடைந்து வருவதுக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்.
திருச்செந்தூருக்கு தினமும் வெளிநாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர், சுகாதாரம் படுமோசமாக உள்ளது. தாமிரபரணி ஆற்றில் உள்ள அணைகள் தூர்வாரப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. முதல்வருக்கு மட்டும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். மக்களை யார் பாதுகாப்பது? முதல்வர் வந்தால் போலீஸார் குவிக்கப்படுகிறார்கள். இதனை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் போது பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, உடன்குடி அனல்மின் நிலையம் தமிழக அரசின் நிதி ரூ.8000 கோடியில் நிறைவேற்றப்படும் என்றார். ஆனால், இதுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை.
தமிழகத்தை சீர்குலைத்தது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான். மக்கள் விரோத கட்சிகள் இவ்விரு கட்சிகள் தான். மக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நான் பணக்காரர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஏழைகள், நடுத்தர மக்கள் பணக்காரர்களாக வேண்டும் என்பது தான் எனது எண்ணம். மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா வேண்டும் என நான் கூறுகிறேன். ஆனால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேண்டாம் என்கிறார்கள். இதில் இருந்தே அவர்கள் ஊழலுக்கு ஆதரவானவர்கள் என்பது தெரிகிறது.
தேசிய நதிநீர் குறித்து பேசும் ஜெயலலிதா தமிழக நதிகளை இணைக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை. மக்கள் சிந்திக்க வேண்டும்.
நரேந்திர மோடி பிரதமரானால் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
மக்களுக்கு இவர்கள் (திமுக, அதிமுக) நன்மை செய்திருந்தால் நான் கட்சியே தொடங்கியிருக்க மாட்டேன். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதை செய்யாமல் விடமாட்டேன்" என்றார் விஜயகாந்த்.